/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதி...45 பேர்:கேன் குடிநீரால் பாதிப்பா என மாதிரி சேகரிப்பு வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதி...45 பேர்:கேன் குடிநீரால் பாதிப்பா என மாதிரி சேகரிப்பு
வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதி...45 பேர்:கேன் குடிநீரால் பாதிப்பா என மாதிரி சேகரிப்பு
வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதி...45 பேர்:கேன் குடிநீரால் பாதிப்பா என மாதிரி சேகரிப்பு
வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதி...45 பேர்:கேன் குடிநீரால் பாதிப்பா என மாதிரி சேகரிப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:44 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 45 பேர், வயிற்றுப்போக்கு காரணமாக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கேன் குடிநீர் அருந்தியதாக கூறியதை அடுத்து, அவற்றின் குடிநீர் மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வயிற்றுப்போக்கு காரணமாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர், ரங்கசாமிகுளம், அய்யங்கார்குளம், பிள்ளையார்பாளையம், கைலாசநாதர் கோவில் தெரு, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இதில், சிகிச்சை முடிந்து 30 பேர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தற்போது இரு சிறுவர்கள் உட்பட 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மூன்று நாட்களாக, வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேசான பாதிப்பு என்பதால், இரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்ததும், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில், சில தினங்களாக வெயிலின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளதால், பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியினருக்கு, குளோரினேஷன் செய்த குடிநீரை அனுப்புவதால், குடிநீர் வாயிலாக வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட ஒரு சிலர் குடிப்பதற்கு கேன் தண்ணீர் வாங்குவதாக கூறினர். இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள கேன் குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். அதன் அறிக்கை பொறுத்து, மற்ற நடவடிக்கை இருக்கும்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் குறிப்பிட்ட ஒரே பகுதியிலோ, ஒரே குடும்பத்தினருக்கோ வயிற்றுப்போக்கு ஏற்படவில்லை.
மாநகராட்சி, அதை ஒட்டிய பகுதிகளில் பரவலாக உள்ளது. இருப்பினும், ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி, வீடாக வீடாக சென்று ஓ.ஆர்.எஸ்., கரைசல், மருந்து மாத்திரை வழங்கி, காய்ச்சிய குடிநீரை பருக ஆலோசனை கூறி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.