Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/100 நாள் வேலையில் 2,810 குறைபாடுகளால்...சிக்கல்! : தணிக்கை குழு ஆய்வால் பணியாளர்கள் கலக்கம்

100 நாள் வேலையில் 2,810 குறைபாடுகளால்...சிக்கல்! : தணிக்கை குழு ஆய்வால் பணியாளர்கள் கலக்கம்

100 நாள் வேலையில் 2,810 குறைபாடுகளால்...சிக்கல்! : தணிக்கை குழு ஆய்வால் பணியாளர்கள் கலக்கம்

100 நாள் வேலையில் 2,810 குறைபாடுகளால்...சிக்கல்! : தணிக்கை குழு ஆய்வால் பணியாளர்கள் கலக்கம்

ADDED : ஜூன் 12, 2024 10:51 PM


Google News
காஞ்சிபுரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 2,810 தணிக்கை குறை பாடுகளால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தணிக்கை ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், குறைபாடுகளை சரி செய்யவில்லை எனில், ஆண்டுதோறும் பணிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என, ஊரக வளர்ச்சி துறை தணிக்கை துறையினர் புலம்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

குளக்கரை வேலை


இந்த திட்டத்தில் லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 1.45 லட்சம் பேருக்கு, நுாறு நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

வாரத்திற்கு, ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 40,918 பேர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.

இந்த பணிகளை ஆண்டுதோறும், சமூக தணிக்கை சங்க பணியாளர்களின் மூலமாக ஆய்வு செய்து, குறைபாடுகளை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, பட்டியலாக எழுதுவர்.

இந்த தணிக்கை குறைபாடுகளை, ஆய்வுக்கு பின் சரி செய்யவில்லை எனில், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் பணி ஓய்வு பெறும் நேரத்தில், ஓய்வு அறிக்கை பெற முடியாத சூழல் ஏற்படும்.

உதாரணமாக, 100 நாள் வேலை திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில், குளக்கரை கற்கள் பதிக்கும் வேலை செய்வதாக எடுத்துக் கொள்வோம்.

குறைபாடு பட்டியல்


பணி முடிந்தவுடன் கற்கள் சரிந்துவிட்டால், அடுத்த நிதி ஆண்டு தணிக்கை ஆய்வு செய்யும் போது, கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது குறைபாடு பட்டியல் எழுதப்படும்.

அதை சரி செய்து, தணிக்கையின் போது, அறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே, ஏற்கனவே இருக்கும் குறைபாடு பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

இந்த சமூக தணிக்கை சங்கத்தினர், 2017- - 18ம் நிதி ஆண்டு முதல், பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, ஐந்து ஆண்டுகளில், 6,857 குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில், 4,047 குறைபாடுகளை சரி செய்யப்பட்டு உள்ளன. மீதம், 2,810 குறைபாடுகள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக, 2020- - 21 மற்றும் 2021- - 22ம் நிதி ஆண்டு சேர்த்து தணிக்கை செய்ததால், ஒரே நேரத்தில், 1,607 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

சமூக தணிக்கை குழுவினர் பல்வேறு கோரிக்கைகளால், தணிக்கை செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவிற்கு பின் மீண்டும் தணிக்கை சங்கம் செயல்பட துவங்கியுள்ளது.

இனி, 2022- - 23 மற்றும் 2023- - 24 ஆகிய இரு நிதி ஆண்டிற்கு இனி மேல் தான் சமூக தணிக்கை நடைபெற உள்ளது. பொதுவாக ஆண்டுதோறும், 500க்கும் குறைவான தணிக்கை குறைபாடு நிலுவையில் இருக்கும்.

ஆய்வு


இதை தணிக்கை ஆய்வில் சரி செய்யவில்லை எனில், குறைபாடு பணிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என, ஊரக வளர்ச்சி துறை தணிக்கை துறையினர் புலம்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி தணிக்கை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், சமூக தணிக்கை சங்கத்தினர் ஆய்வு செய்து, ஆண்டுதோறும் கணிசமான குறைபாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த குறைபாடுகளை, அடுத்த ஆண்டிற்குள் சரி செய்ய வேண்டும். நிர்வாகத்தில் சில இடையூறுகளால், கடந்த ஆண்டு சமூக தணிக்கை கூட்டு ஆய்வு நடைபெறவில்லை.

தற்போது, மீண்டும் ஆய்வு செய்யலாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டின் புதிய குறைபாடுகள் மற்றும் கடந்த ஆண்டின் நிலுவை குறைபாடுகளை, இந்த ஆண்டு கூட்டு தணிக்கை ஆய்வில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலுவை குறைபாடுகள்


நிதி ஆண்டு மொத்த குறைபாடுகள் நிலுவை குறைபாடுகள்
2017- - 18 1,270 390

2018- - 19 1,637 447
2019- - 20 1,308 366
2020- - 21- மற்றும் 2021 - -22 2,642 1,607
2022 - 23 மற்றும் 2023 - 24 இனிதான் தணிக்கை







      Our Apps Available On




      Dinamalar

      Follow us