Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 23 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களால் நலத்திட்ட உதவி மக்களை சென்றடைவதில் சிக்கல்

23 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களால் நலத்திட்ட உதவி மக்களை சென்றடைவதில் சிக்கல்

23 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களால் நலத்திட்ட உதவி மக்களை சென்றடைவதில் சிக்கல்

23 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களால் நலத்திட்ட உதவி மக்களை சென்றடைவதில் சிக்கல்

ADDED : ஜூன் 15, 2025 01:11 AM


Google News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சி செயலர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், 23 பணியிடங்கள் காலியாக இருப்பதால், நலத்திட்ட பணிகள் மக்களை சென்றடைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

பெரும் சவால்


குடிநீர் விநியோகம், தூய்மை பணிகளை மேற்கொள்வது ஊராட்சியின் பிரதான பணியாகும். ஊராட்சிகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில், ஊராட்சி செயலர்கள் நிர்வாக பொறுப்பை கவனிப்பது வழக்கம்.

கடந்த 2016 முதல் 2020 வரை மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்களே, ஊராட்சி செயலர்கள் வாயிலாக நிர்வாக பொறுப்பை கவனித்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 73 ஊராட்சி செயலர்கள் பணியாற்றவேண்டிய நிலையில், 50 ஊராட்சி செயலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இதில், 23 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு ஊராட்சி செயலர் அருகில் காலியாக இருக்கும் ஊராட்சியை சேர்த்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

அப்போது, ஊராட்சிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் ஏற்பட்டு, மக்களிடம் அதை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து, இரண்டு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒரே நேரத்தில் நடக்கும்போது, ஊராட்சி செயலரின் பணி பெரும் சவாலாக உள்ளது.

தினக்கூலி


அதேபோல, ஊராட்சிகளில் குடிநீர் தொட்டி இயக்குபவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் போதிய அளவில் இல்லாத நேரங்களில், தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இது குறித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கூறியதாவது:

உத்திரமேரூர் ஒன்றியத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலி பணியிடங்கள் பிரச்னை தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 23 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்பப்படாமல் இருப்பது, மக்களிடம் நலத்திட்டங்களை கொண்டு செல்வதில் பெரும் சவாலாக உள்ளது. எனவே, அரசு விரைந்து காலி பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஊராட்சிகளில் ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக இருப்பதால், அங்கு குறித்த நேரத்திற்கு நலத்திட்ட பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தொடர்ந்து, ஒரே நேரத்தில் இரு ஊராட்சிகளின் பதிவேடுகளை முறையாக பராமரிக்க முடியாத சூழல் உள்ளது.

இதனால், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 23 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us