Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 1,500 மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயார் மின் சப்ளை தொடர்ந்து வழங்கவும் மாற்று ஏற்பாடு

1,500 மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயார் மின் சப்ளை தொடர்ந்து வழங்கவும் மாற்று ஏற்பாடு

1,500 மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயார் மின் சப்ளை தொடர்ந்து வழங்கவும் மாற்று ஏற்பாடு

1,500 மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயார் மின் சப்ளை தொடர்ந்து வழங்கவும் மாற்று ஏற்பாடு

ADDED : செப் 21, 2025 10:41 PM


Google News
காஞ்சிபுரம்:பருவ மழைக்கு மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டால், உடனடியாக மாற்றுவதற்கு 1,500 மின் கம்பங்கள் தயாராக உள்ளன. மேலும், தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு, மின் மாற்றி இணைப்புகளை சரி படுத்தும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மின் வாரிய கோட்ட அலுவலகங்களின் கீழ், 41 துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த துணை மின் நிலையங்களின் கட்டுப்பாட்டில், 1.25 லட்சம் குடியிருப்பு மற்றும் வணிக மின் இணைப்புகள் உள்ளன.

இந்த மின் இணைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு, 5,000க்கும் மேற்பட்ட மின் மாற்றிகளும், 76,000 மின் கம்பங்களும் உள்ளன. 3 லட்சம் கி.மீ., நீளம் மின் வழித்தட கம்பிகள் உள்ளன.

இந்த மின் தள வாடங்களை கையாளுவதற்கு, மின் கள உதவியாளர், கம்பியாளர், மின்பாதை ஆய்வாளர், ஆக்க முகவர், வணிக ஆய்வாளர், இளநிலை மற்றும் உதவி மின் வாரிய பொறியாளர் உள்ளிட்ட 1,240 பணியிடங்கள் உள்ளன.

புகார்கள் இந்த பணியாளர்களின் வாயிலாக, மின் நுகர்வோர் மற்றும் தொழில் வழித்தடங்களில் ஏற்படும் மின்சாரம் தொர்பான பிரச்னைகள், மின் வினியோகம், பழுது நீக்குவது, புதிய தடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், கம்பியாளர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 461 பணியிடங்கள் காலியாக உள்ளன. இருப்பினும், நான்கு ஒப்பந்த நிறுவனத்தின் மின் வாரிய ஊழியர்களை வைத்து மின் பிரச்னை சரி செய்வதாக மின் வாரிய தரப்பில் தெரிவிக்கின்றனர்.

உத்திரமேரூர், வாலாஜாபாதில் அடிக்கடி மின் சப்ளை துண்டிப்பு மற்றும் வேளியூர் பகுதியில் குறைந்த அழுத்த மின் வினியோகம் செய்வது உள்ளிட்ட புகார்கள் உள்ளன.

இந்த குறைந்த அழுத்த மின் சப்ளை வினியோகம், பியூஸ் போடுவது, மின் வழித்தடத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட மின்சார வினியோகம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.

எனினும், பருவ மழை துவங்க உள்ள நிலையில், மின் பிரச்னைகளை சரி செய்வதற்கு பல்வேறு திட்டங்களை மின் வாரிய அதிகாரிகள் கையாள துவங்கியுள்ளனர்.

நடவடிக்கை குறிப்பாக, பருவ மழைக்கு மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டால், உடனடியாக மாற்றுவதற்கு புதிய மின் கம்பங்களை உதவிக்கோட்டங்கள் தோறும் இருப்பு வைக்கப்பட உள்ளன.

ஒரு துணை மின் நிலையத்தில் இருந்து சப்ளையாகும் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டால், மற்றொரு துணை மின் நிலையத்தில் இருந்து, மின் சப்ளை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க சவுகரியமாக மின் மாற்றி இணைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலமாக, பருவ மழை பாதிப்பால், மின் சப்ளை இன்றி தவிக்க வேண்டிய நிலை உருவாகாது என, மின்வாரிய அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பருவ மழைக்கு சேதம் ஏற்படும் மின் கம்பங்களுக்கு பதிலாக, 1,500 புதிய மின் கம்பங்கள் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் தயாராகவும், கூடுதல் மின் கம்பங்கள் இருப்பு வைக்கப்பட உள்ளன.

இதுதவிர, மின் பிரச்னைகளை சரி செய்வதற்கு, மின் வாரிய அதிகாரிகளுடன் ஒப்பந்த ஊழியர்களையும் பயன்படுத்த உள்ளோம். தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us