/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம் உத்திரமேரூர் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
உத்திரமேரூர் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
உத்திரமேரூர் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
உத்திரமேரூர் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் 10,000 நெல் மூட்டைகள் தேக்கம்
ADDED : செப் 12, 2025 02:36 AM

உத்திரமேரூர்:வேடபாளையம், அம்மையப்பநல்லுார், ஆனைப்பள்ளம் ஆகிய கிராமங்களில் உள்ள, நெல் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால், 10,000 நெல் மூட்டைகள் அங்கேயே தேக்கமடைந்துள்ளன.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடபாளையம், அம்மையப்பநல்லுார், ஆனைப்பள்ளம் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமங்களில் 3,000 ஏக்கர் பரப்பளவில் சொர்ணவாரி பருவ நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரை அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 10 நாட்களுக்கு முன் வேடபாளையம், அம்மையப்பநல்லுார், ஆனைப்பள்ளம் ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஒரு வாரமாக, இந்த மூன்று கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து, வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரிகள் வராததால், மூன்று நெல் கொள்முதல் நிலையங்களை சேர்த்து 10,000 நெல் மூட்டைகள் அங்கேயே தேக்கமடைந்துள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகள் வராததால், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை குவியலாக கொட்டி வைத்து விற்பனைக்காக காத்திருக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
வேடபாளையம், அம்மையப்பநல்லுார், ஆனைபள்ளம் ஆகிய பகுதிகளில், நெல் கொள்முதல் நிலையங்களில் லாரிகள் வராததால் நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல்லை விற்க முடியாத சூழல் உள்ளது.
உத்திரமேரூர் பகுதிகளில் அவ்வப்போது, பெய்யும் மழையினால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணியை துவங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட, நெல்லை, காஞ்சிபுரம் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல லாரிகள் வரவில்லை.
இதனால், நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களிலே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.