ADDED : ஜூன் 13, 2024 04:38 PM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், மேனலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 35. குடும்ப செலவுக்காக சில இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. அப்பணத்தை கடன் கொடுத்த நபர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், திரும்ப கொடுக்க முடியாததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தன் வீட்டில் இருந்த விஷத்தை, சங்கர் குடித்துள்ளார். உத்திரமேரூர் வட்டார அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
* உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளம், 48; செங்கல் சூளை தொழிலாளர். மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர், கடந்த 11ம் தேதி, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் பிரதீப், 20, ஆகியோர் பக்கத்து வீட்டிற்கு உறங்கச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், தன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து பரிமளம் தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரிமளம், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.