ADDED : ஜூன் 11, 2024 04:55 AM

சென்னை : சென்னையில் நடந்த தேசிய அலைச்சறுக்கு பாய்மரப்படகு எனும் 'விண்ட் சர்பிங்' போட்டியில், சென்னை வீராங்கனை மற்றும் வீரர்கள் அசத்தலாக விளையாடி, பதக்கங்களை வென்றனர்.
தமிழக செயிலிங் அசோசியேஷன் மற்றும் சென்னை சர்பிங் அகாடமி சார்பில், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன், தேசிய அளவிலான அலைச்சறுக்கு பாய்மரப் படகுப் போட்டி, சென்னையில் நடத்தப்பட்டது. கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, சென்னை துறைமுகத்தில் நடந்த இந்த போட்டியில், 25 மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர்.
இவர்களில், சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா கணேஷ் தங்கப் பதக்கத்தையும், ஸுமந்த் அருணாச்சலம் மற்றும் சச்சின் கணேஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தனர்.