ADDED : ஜூன் 20, 2024 10:57 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், 21 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு- - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, பொது நிதிகளில் பணிகள் தேர்வு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டன.
மேலும், அனைத்து வார்டுகளிலும் குடிநீர்,கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மன்ற பொருளாளர் முன் வைக்கப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூரில் மாசு கலந்த குடிநீர் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு வயிற்றுப்போக்கால், இருவர் உயிரிழந்தனர்.
மேலும், அப்பகுதியில் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் உலகநாதன் தங்கள் பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் காஞ்சனா தெரிவித்தார்.
கூட்டத்தில், துணைத் தலைவர் சேகர் மற்றும்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.