/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் அரசு பள்ளி இடம் மாற்ற பெற்றோர் எதிர்ப்பு உத்திரமேரூர் அரசு பள்ளி இடம் மாற்ற பெற்றோர் எதிர்ப்பு
உத்திரமேரூர் அரசு பள்ளி இடம் மாற்ற பெற்றோர் எதிர்ப்பு
உத்திரமேரூர் அரசு பள்ளி இடம் மாற்ற பெற்றோர் எதிர்ப்பு
உத்திரமேரூர் அரசு பள்ளி இடம் மாற்ற பெற்றோர் எதிர்ப்பு
ADDED : ஜூன் 24, 2024 05:20 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பல ஆண்டுகளாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை 1,400 மாணவியர் இப்பள்ளியில் பயில்கின்றனர்.
இந்த பள்ளிக்கான வகுப்பறை கட்டடங்கள்,50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கட்டடங்கள் நாளுக்கு நாள் பலவீனமடைந்து, பழைய கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதால்,அதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக 25 புதிய வகுப்பறைகள் ஏற்படுத்த, 6 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சேதமான பழைய கட்டடங்களை இடிக்க, பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவியர், பள்ளி கட்டுமான பணிகள் முடிவுறும் நாள் வரை, உத்திரமேரூரில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள பாப்பாங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடம் மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்கு மாணவியரின் பெற்றோர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கம்மாளம்பூண்டி பகுதியைச் சேர்ந்த மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:
இப்பகுதியில் இருந்து, பாப்பாங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல உத்திரமேரூர் வரை ஒரு பேருந்தில் பயணித்து, உத்திரமேரூரில் இருந்து மற்றொரு பேருந்து பிடித்து பாப்பாங்குளம் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், மாணவியருக்கு அலைச்சல் மற்றும் கூடுதல் நேரம் செலவீடு போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
இதனால் மாற்று ஏற்பாடு செய்து உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே மாணவியர் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.