ADDED : ஜூன் 25, 2024 06:26 AM
சென்னை, தாம்பரம் அருகே, முடிச்சூர் சி.எ: ஐ., சர்ச் பின்புறம் உள்ள காலி நிலத்தில், இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக, பீர்க்கன்காரணை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற பீர்க்கன்காரணை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையானது தாம்பரம் அருகே, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 19, என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட, அதே பகுதியைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 31, ஆமோஸ், 30, குமார், 27, ஆகிய மூவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இக்கொலை குறித்து, போலீசார் கூறியதாவது:
வரதராஜபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ், 20, சூர்யகாந்தி, 26, இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வரதராஜபுரத்தில் மொபைல் போனில் சந்தோஷ் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த சூரியகாந்தி, அவரது மொபைல் போனை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்த அறிந்த சந்தோஷின் தாய், சூர்யகாந்தியின் தாயிடம் பேசி, அந்த போனை வாங்கி வந்துள்ளார்.
இதில் அதிருப்தியடைந்த சந்தோஷ், தன் நண்பர்கள் விக்னேஷ் உட்பட 10 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை மயக்கத்தில் இருந்த அவர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், சூரியகாந்தி வீட்டுக்கு நேராக சென்றனர். அவரை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடையே வாக்குவாதம் முற்றி, சூரியகாந்தியை அவர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதை பார்த்த சூரியகாந்தியின் அண்ணன் ராஜிவ்காந்தி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சந்தோஷ் தரப்பினரை தடுத்தனர். பின், அவர்களிடம் இருந்து கத்திகளை பிடுங்கிய ராஜிவ்காந்தி உள்ளிட்டோர், சந்தோஷ் தரப்பினரை வெட்ட முயன்றனர்.
அதற்குள் அவர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், விக்னேஷ் தனியாக மாட்டிக் கொண்டதால், அவரை வெட்டி கொன்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், இறந்து போன விக்னேஷின் நண்பர்கள் நான்கு பேர், பழிக்குப்பழி வாங்க, சூர்யகாந்தியின் நண்பரான முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத், 22, என்பவரை, நேற்று மாலை வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ஸ்ரீநாத், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.