/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பூங்கா 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பூங்கா
5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பூங்கா
5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பூங்கா
5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் பூங்கா
ADDED : ஜூலை 22, 2024 11:17 PM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை அரசு நகரில், மத்திய அரசின், 'அம்ரூட்' திட்டத்தின் கீழ், 2017 - 18 நிதியாண்டில் பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட நடைபாதை, அதை சுற்றிலும், கைப்பிடி சுவர்போல துருப்பிடிக்காத இரும்பு பைப்புகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், சீசா, சறுக்கு விளையாட்டு உபகரணங்கள், மார்பிள் கற்களால் செய்யப்பட்ட இருக்கை.
பச்சை பசேல் என புல் தரை அதில் பூத்து குலுங்கும் பூச்செடிகள், இயற்கை உபாதைக்காக ஆண், பெண்களுக்கு என, தனித்தனி கழிப்பறை, இரவில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இப்பூங்காவை ஓரிக்கை அரசு நகர், டெம்பிள்சிட்டி, வேளிங்கப்பட்டரை உள்ளிட்ட பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். 2020ல் கொரோனா ஊரடங்கின்போது இப்பூங்கா மூடப்பட்டது. அதன்பின், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை திறக்கவில்லை.
பராமரிப்பு இல்லாததால், பூங்கா வளாகம் மற்றும் நடைபாதையில் செடி, கொடிகள், சீமை கருவேல மரங்கள் புதர்போல மண்டியுள்ளது.
சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. கழிப்பறையின் கதவுகள் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மார்பிள் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கைகள், நடைபயிற்சி தளத்தில் அமைக்கப்பட்டிருந்த துருப்பிடிக்காத இரும்பு கம்பிகள் திருடு போயுள்ளன.
இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பூங்காவை மது அருந்தவும், சூதாட்டத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா, கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, அரசு நகர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''காஞ்சிபுரம் ஓரிக்கை அரசு நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவை ஆய்வு செய்து, அதை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.