/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மருந்தகத்தில் விற்கப்பட்ட தாய்ப்பால் புட்டிகள் 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி மருந்தகத்தில் விற்கப்பட்ட தாய்ப்பால் புட்டிகள் 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி
மருந்தகத்தில் விற்கப்பட்ட தாய்ப்பால் புட்டிகள் 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி
மருந்தகத்தில் விற்கப்பட்ட தாய்ப்பால் புட்டிகள் 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி
மருந்தகத்தில் விற்கப்பட்ட தாய்ப்பால் புட்டிகள் 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி
ADDED : ஜூன் 01, 2024 05:51 AM
சென்னை : இந்தியாவில், தாய்ப்பாலை வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 200 மில்லி தாய்ப்பாலை 1,000 ரூபாய்க்கு விற்ற மாதவரம் மருந்தகத்திற்கு, உணவு பாதுகாப்பு துறையினர், நேற்று 'சீல்' வைத்தனர். தாய்ப்பால் சப்ளை செய்தோர், வாங்கியோர் குறித்த பட்டியலையும் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, மாதவரம் கே.கே.ஆர்., கார்டன் பகுதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செம்பியம் முத்தையா, 40, என்பவருடைய, 'லைப் வேக்சின் ஸ்டோர்' என்ற மருந்தகத்தில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் நேற்று, திடீர் சோதனை நடந்தது.
சோதனை
மாதவரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்துாரி, மத்திய உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய அதிகாரி அருளானந்தம் உள்ளிட்டோர், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில், 45 பிளாஸ்டிக் கன்டெய்னர்களில், 200 மி.லி., அளவுடைய 90க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனைக்காக தாய்ப்பால் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
அதில், 40க்கும் மேற்பட்ட பாட்டில்களின் லேபிள்களில், 'பதப்படுத்தப்பட்ட புதிய தாய்ப்பால்' என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் விலை, 500 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழக எல்லை வனப்பகுதிகளில் வசிக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களிடம் இருந்து, ஏஜன்ட்டுகள் வாயிலாக தாய்ப்பால் வாங்கி, விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தாய்ப்பால் விற்பனையை, உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் முற்றிலுமாக தடை செய்துள்ள நிலையில், அதை விற்பனை செய்த, மருந்தகத்திற்கு, உணவு பாதுகாப்பு துறையினர், 'சீல்' வைத்தனர். மேலும், தாய்ப்பால் விற்பனைக்கான ஆவணங்கள், தகவல் தொடர்புகளை கைப்பற்றினர்.
விசாரணை
இது குறித்து கடையின் உரிமையார் செம்பியம் முத்தையா கூறியதாவது:
இந்தியாவில் தாய்ப்பால் தேவை அதிகமாக உள்ளது. இதையொட்டி மார்ச் மாதம் தான், தாய்ப்பாலை விற்பனை செய்ய துவங்கினோம்.
அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ரயில்வே மருத்துவமனைகளுக்கு சென்று தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, தாய்ப்பாலை சேகரிப்போம்.
இந்நிலையில், ஏப்., மாத இறுதியில் தான், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்திருப்பது தெரிய வந்தது. இதனால், விற்பனை செய்வதை நிறுத்திவிட்டோம். இதுவரை 10 பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்துள்ளோம். மீதம் இருந்தவற்றை அப்புறப்படுத்துவதற்காக மட்டுமே வைத்திருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதாவது:
இந்த கடைக்கு, 'புரோட்டீன் பவுடர்' எனப்படும் புரதச்சத்து மாவு விற்பதற்கு தான் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை பயன்படுத்தி புரோட்டின் பவுடர் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், இந்த கடையில் புரோட்டின் பவுடர் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வந்ததையும், ஆனால், விற்பனை அதிகரித்து வந்ததையும் கண்டுபிடித்தோம்.
கடையின் உரிமையாளர், புரோட்டின் பவுடர் விற்பனை உரிமத்தை வைத்து, தாய்ப்பால் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மாதவரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கஸ்துாரி, தனக்கு தாய்ப்பால் தேவைப்படுவதாக, கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். உடனடியாக அவர் தாய்ப்பால் புட்டியை விற்பனை செய்தார். இதையடுத்து, அங்கு விதிமீறி தாய்ப்பால் விற்கப்படுவதை உறுதி செய்தோம்.
கடந்த, 10 நாட்களாக சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில், கடையில் நேற்று திடீர் சோதனை செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை பறிமுதல் செய்தோம். இவற்றின் மாதிரிகள், கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல், எந்தெந்த பெண்களிடம் தாய்ப்பால் பெற்றுள்ளனர் என்ற விபரங்களை கைப்பற்றி உள்ளோம். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தாய்ப்பாலை இயற்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது.
தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது. இதற்கு அங்கீகாரம் கிடையாது. விசாரணை முழுமை பெற்ற பின், முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.