/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விபத்து, உயிரிழப்பை தடுக்க 1,315 பஸ்களில் பக்கவாட்டில் கம்பி விபத்து, உயிரிழப்பை தடுக்க 1,315 பஸ்களில் பக்கவாட்டில் கம்பி
விபத்து, உயிரிழப்பை தடுக்க 1,315 பஸ்களில் பக்கவாட்டில் கம்பி
விபத்து, உயிரிழப்பை தடுக்க 1,315 பஸ்களில் பக்கவாட்டில் கம்பி
விபத்து, உயிரிழப்பை தடுக்க 1,315 பஸ்களில் பக்கவாட்டில் கம்பி
ADDED : ஜூன் 08, 2024 04:36 AM
சென்னை : மாநகர பேருந்துகளின் கீழ் பக்கவாட்டு பகுதியில், இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்குவதை தடுக்க, 1,315 பேருந்துகளின் இருபுற பக்கவாட்டிலும் தடுப்பு கம்பி பொருத்தப்பட்டுள்ளதாக, மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாநகர பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை, நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, முன்னெச்சரிக்கையுடன் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஆனாலும், பேருந்துகளின் அருகில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, பேருந்து சக்கரங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், பேருந்துகளின் இருபுறமும், கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பி அமைக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தற்போது 1,315 பேருந்துகளில் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளப்பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
பேருந்து சக்கரங்களுக்கு இடையே, விபத்து தடுப்பு கம்பிகளை அமைத்து, மாநகர பேருந்துகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறோம்.
இந்த நடவடிக்கையால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்தை முந்திச் செல்லும் போது அல்லது எதிர்பாராத நேரங்களில் யாராவது பேருந்துக்கு அடியில் சிக்கி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில், தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2,212 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல்கட்டமாக 600 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டத்தில் 715 பேருந்துகளிலும் தடுப்பு கம்பி பொருத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.