ADDED : ஜூலை 08, 2024 05:20 AM
சென்னை: புரசைவாக்கத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் இருவர் தங்கி உள்ளனர். இவர்கள் நேற்று காலை, மெரினா கடற்கரையில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிருக்கு போராடினர்.
இது குறித்து, கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த மெரினா உயிர் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், உயிருக்கு போராடிய சிறுவர்களை மீட்டனர்.
அதேபோல, நேபாளத்தைச் சேர்ந்த சஞ்சித்குமார், 25, தேனாம்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரும் நேற்று மாலை, மெரினா கடற்கரையில் குளிக்கும்போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
உயிருக்கு போராடிய சஞ்சித்குமாரை, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.எஸ்.பி., பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் மீட்டனர்.
மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர் என, போலீசார் தெரிவித்தனர்.