/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ என்னை ஜெயிலில் போடுங்க! குண்டு வீசி ரவுடி அட்டகாசம் என்னை ஜெயிலில் போடுங்க! குண்டு வீசி ரவுடி அட்டகாசம்
என்னை ஜெயிலில் போடுங்க! குண்டு வீசி ரவுடி அட்டகாசம்
என்னை ஜெயிலில் போடுங்க! குண்டு வீசி ரவுடி அட்டகாசம்
என்னை ஜெயிலில் போடுங்க! குண்டு வீசி ரவுடி அட்டகாசம்
ADDED : ஜூலை 27, 2024 07:27 AM

அண்ணா நகர் : அண்ணா நகர் கிழக்கு, அன்னை சத்யா நகர், எட்டாவது தெரு வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர், ஐந்து பீர் பாட்டில்களுடன் நடந்து வந்தார். பீர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி, திரி வைத்திருந்தார்.
அப்பகுதி போலீஸ் பூத் அருகில் வந்த அவர், திடீரென ஒரு பாட்டிலின் திரியை பற்ற வைத்து, அங்கிருந்த சுவரின் மீது வீசினார். அப்போது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
சற்று அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் சுவர் மீதும், மற்றொரு பெட்ரோல் குண்டை வீசினார். அது, கடையின் அருகில் வெடித்து தீப்பிடித்தது. அந்நேரத்தில், அப்பகுதியில் அமர்ந்து மது அருந்திய சிலர் அலறி ஓடினர்; சிலர் தீயை அணைக்க முயன்றனர். யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
மற்றொரு பாட்டிலை வீச முயன்றபோது, அங்கிருந்த சிலர் போதை வாலிபரை மடக்கி பிடித்தனர். தகவலறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர். அந்நபர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரவுடி பாலமுரளி, 31, என்பது தெரிந்தது. இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் தாயுடன் திருச்சிக்கு சென்று, அங்கேயே வசித்துள்ளார். அதீத மது போதைக்கு அடிமையான அவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளார்.
பாலமுரளியிடம் விசாரித்தபோது, ''வெளியில் இருக்க பிடிக்கவில்லை; என்னை ஜெயிலில் போடுங்கள். இதற்காக தான் பெட்ரோல் குண்டு வீசினேன்,'' என, போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட பாலமுரளியை, மருத்துவமனைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரிக்கின்றனர்.