Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குட்டைமேடில் தொடரும் மருத்துவ முகாம்

குட்டைமேடில் தொடரும் மருத்துவ முகாம்

குட்டைமேடில் தொடரும் மருத்துவ முகாம்

குட்டைமேடில் தொடரும் மருத்துவ முகாம்

ADDED : ஆக 05, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 34வது வார்டு, வள்ளல் பச்சையப்பன் தெருவை ஒட்டியுள்ள குட்டைமேடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில், கழிவுநீர் கலந்ததால், கடந்த 26ம் தேதி முதல், நேற்று வரை என, 12 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் நிர்மலா 55; சாரதி, 15; கோமதி, 24 ஆகிய மூன்று பேர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி, மாநகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் ஆகியோர் இரண்டாவது நாளாக நேற்றும், குட்டைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டோர் விபரம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யவும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில், சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் தலைமையில், நகர்ப்புற சுகாதார செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர், குட்டைமேடில் நேற்று முன்தினம் முதல், மருத்துவ முகாம் அமைத்து, அப்பகுதியினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், மேகலா, 36, என்பவருக்கு நேற்று முன்தினம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், மேகலாவுக்கு சிகிச்சை அளித்து, வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குட்டைமேடு பகுதியை சுத்தப்படுத்தி, பிளீச்சிங் பவுடர் துாவினர். குட்டைமேடு பகுதியில் இயல்புநிலை திரும்பும் வரை, மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும்.

அதேபோல, டேங்கர் லாரி வாயிலாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். அப்பகுதியில் வினியோகிக்கப்பட்ட கழிவுநீர் கலந்த குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, கிண்டியில் உள்ள தண்ணீர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us