/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது
நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது
நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது
நடிகை கவுதமியின் புகாரில் நில மோசடி நபர் கைது
ADDED : ஜூலை 16, 2024 11:22 PM

காஞ்சிபுரம், நடிகை கவுதமி, தன் அண்ணன் சார்பில், போலீசில் அளித்த நில மோசடி வழக்கில் அழகப்பன், 64, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், நடிகை கவுதமிக்கு சொந்தமான, பல ஏக்கர் நிலம் இருந்தது. கவுதமியின் நம்பிக்கைக்கு உரியவராக சென்னையைச் சேர்ந்த அழகப்பன், 64, என்பவர் இருந்தார். கவுதமி, தன் பல்வேறு சொத்துக்களை விற்பனை செய்ய, அழகப்பனை நம்பி பவர் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கவுதமியின் சொத்துகளை மோசடியாக விற்பனை செய்து, 25 கோடி ரூபாய் ஏமாற்றியதாக, சென்னையைச் சேர்ந்த அழகப்பன், அவர் மனைவி நாச்சாள், குடும்ப உறுப்பினர்கள் என, 5 பேர் ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின், ஜாமீனில் வெளியே வந்த அழகப்பன் தலைமறைவாக இருந்து வந்தார்.
கவுதமி மற்றும் குடும்பத்தினரின் சொத்துகளை மோசடியாக விற்பனை செய்து, கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிவிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவிலும், அழகப்பன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் நடிகை கவுதமியின் அண்ணன் ஸ்ரீகாந்த் என்பவரும், தன்னை அழகப்பன் மோசடி செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், தன் அண்ணன் ஸ்ரீகாந்த் சார்பில், நடிகை கவுதமி, கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.
அதில், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில், கவுதமியின் தாயார் வசுந்தராதேவிக்கு சொந்தமான நிலத்தில், கவுதமியின் அண்ணனுக்கு சேர வேண்டிய 1.26 ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
இதை விற்பனை செய்ய, அழகப்பனுக்கு, கடந்த 2015ல் அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலத்தை, 60 லட்ச ரூபாய்க்கு அழகப்பன் விற்பனை செய்துள்ளார். ஆனால், ஸ்ரீகாந்திற்கு அந்த தொகை கொடுக்கப்படவில்லை. சில மாதங்கள் கழித்து, இதே நிலத்தை, 1.63 கோடிக்கு, கூட்டாளி ரகுநாதன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
விற்பனை செய்த பணத்தையும் கொடுக்காமல், நிலத்தை ஏமாற்றி மோசடி செய்ததாக அழகப்பன், ரகுநாதன், சுகுமார் ஆகிய மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், அழகப்பன், ரகுநாதன், சுகுமார் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், அழகப்பன் என்பவரை, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.