/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குமரகோட்டம் முருகப்பெருமானுக்கு பரணி காவடி எடுத்த பக்தர்கள் குமரகோட்டம் முருகப்பெருமானுக்கு பரணி காவடி எடுத்த பக்தர்கள்
குமரகோட்டம் முருகப்பெருமானுக்கு பரணி காவடி எடுத்த பக்தர்கள்
குமரகோட்டம் முருகப்பெருமானுக்கு பரணி காவடி எடுத்த பக்தர்கள்
குமரகோட்டம் முருகப்பெருமானுக்கு பரணி காவடி எடுத்த பக்தர்கள்
ADDED : ஜூலை 29, 2024 05:08 AM

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய கோவிலில், ஆடி பரணியையொட்டி மூலவருக்கு நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
பரணி நட்சத்திரத்தையொட்டி, திரளான பக்தர்கள், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று நடக்கும் ஆடி கிருத்திகையையொட்டி, பொது தரிசனம், சிறப்பு தரிசனத்திற்கு என, தனி வழி அமைத்து, பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
உட்பிரகாரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க மூலவரை தரிசனம் மட்டும் செய்யவும், வெளிபிரகாரத்தில் உள்ள கந்தபுராணம் அரங்கேறிய மண்டபத்தில் உற்சவருக்கு அர்ச்சனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களை வரிசைப்படுத்த, கோவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆடி கிருத்திகையையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 11:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அம்மன் கோவில்கள்
ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், கூழ்வார்த்தல் விழா நடந்தது.
காஞ்சிபுரம் சாலை தெரு, குளக்கரை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி காலை 7:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் ஜலம் திரட்டும் நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது.
மூலவர் அம்மன், புற்று மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் பூங்கரம் வீதியுலா நடந்தது. மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு புஷ்பவிமானத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் கோவிலிலும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காஞ்சிபுரம் சேஷாத்ரிபாளையம் படவேட்டம்மன், சுந்தரி அம்மன் கோவிலில் 70வது ஆடி திருவிழா நடந்தது. இரவு 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.