Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாலாற்று தடுப்பணையில் மணல் தேக்கம் ; சிறு மழைக்கே நிரம்பி வீணாகும் அவல நிலை

பாலாற்று தடுப்பணையில் மணல் தேக்கம் ; சிறு மழைக்கே நிரம்பி வீணாகும் அவல நிலை

பாலாற்று தடுப்பணையில் மணல் தேக்கம் ; சிறு மழைக்கே நிரம்பி வீணாகும் அவல நிலை

பாலாற்று தடுப்பணையில் மணல் தேக்கம் ; சிறு மழைக்கே நிரம்பி வீணாகும் அவல நிலை

ADDED : ஜூலை 21, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத் : பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில், அணை உயரத்திற்கு மணல் நிரம்பி உள்ளதால், சிறு மழைக்கே அணை நிரம்பி உள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த, திருமுக்கூடல் அருகே, பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.

பாலாற்றின் மூலம் திருமுக்கூடல், பழையசீவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இதனால், இப்பகுதி பாலாற்று படுகையை மையமாக கொண்டு தடுப்பணை கட்டி பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க செய்ய, சுற்று வட்டார கிராம விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

புதிய தடுப்பணை


அக்கோரிக்கையை ஏற்று, 2020ம் ஆண்டு, பழையசீவரம்- பழவேரி பாலாற்றின் குறுக்கே, நபார்டு திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன் கூடிய ஷட்டர் மற்றும் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால் பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தடுப்பணை கட்டியதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக பருவமழை காலத்தின் போது தடுப்பணை நிரம்பி வழிகிறது.

அச்சமயங்களில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தண்ணீரோடு மணல் அடித்து வந்து தடுப்பணையின் பள்ளமான ஆழ பகுதிகள் மூடப்பட்டு, தற்போது அணை உயரத்திற்கு மணல் சேர்ந்து மேடு போல உள்ளது.

இதனால், பருவமழை காலம் மட்டுமின்றி, கோடைகால மழை, தென்மேற்கு பருவ கால மழை போன்ற மழை நேரங்களிலும், ஆற்றில் நீர் வரத்து இல்லாமலே இத்தடுப்பணை நிரம்பி விடுகிறது.

ஆறு அடி உயரத்திற்கு கட்டப்பட்ட பாலாற்று தடுப்பணை, தற்போது ஒரு அடி உயர ஆழம் கூட இல்லாமல் மணல் மூடி உள்ளதால் சிறு மழைக்கே அணை நிரம்பி விடுவதாக இப்பகுதி விவசாயிகள் பலரும் புலம்புகின்றனர்.

இதனால், இப்பகுதியில் தடுப்பணை இருந்தும், பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பின்றி, விவசாயத்திற்கு பயன் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பருவமழை காலத்திற்குள் இத்தடுப்பணையில், அணை உயரத்துக்கு குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

எதிர்பார்ப்பு


இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல நீர்வளத்துறை பொறியாளர் மார்க்கண்டேயன் கூறியதாவது:

பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் பள்ளமான பகுதிகளை மணல் மூடி உள்ளது. இதனால், விரைவாக அணை நிரம்பி விடுகிறது.

தடுப்பணையில் குவிந்துள்ள மணலை அகற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தடுப்பணை பகுதியில் அதிக அளவிலான மணல் தேங்கி உள்ளதால், அதை கனிமவளத்துறை வாயிலாக அகற்ற வேண்டி உள்ளது.

இதுகுறித்து நீர்வளத் துறை சார்பில் மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us