/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மழைநீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
மழைநீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
மழைநீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
மழைநீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2024 02:48 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு மருத்துவமனை, தலைமை அஞ்சலகம் ஒட்டியுள்ள பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம் நுழைவாயில், பி.எஸ்.கே., தெரு சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் கால்வாய்க்கு இணைப்பு வழங்கப்படாமலும், மேல்தளம் அமைக்காமலும் இருந்தது.
இதனால், மழைக்காலத்தில் இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை சார்பில், 1 மீட்டர் அகலமுள்ள கால்வாயை 1.20 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தி கால்வாய்க்கு, கான்கிரீட் தளம் அமைக்கவும், கால்வாய்க்கு இணைப்பு இல்லாத பகுதியில் இணைப்பு ஏற்படுத்தவும், மொத்தம் 600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள அம்மன் கோவில் பகுதியில், கால்வாய் பணி நடக்கும் இடத்தில் பள்ளம் உள்ளதாலும், கம்பிகள் நீண்டு உள்ளதாலும், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. சாலையோரம் தடுப்பும் அமைக்கவில்லை.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் வடிகால்வாய் கட்டுமானப் பணி நடைபெறுமிடத்தில் சாலையோரம் ஒதுங்கும்போது, கம்பியில் இடித்துக் கொண்டும், நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வடிகால்வாய் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில், விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.