Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் 2 இடங்களில் மேம்பாலம் கட்டாமல் அலட்சியம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போட்ட நெ.சா.துறை

காஞ்சியில் 2 இடங்களில் மேம்பாலம் கட்டாமல் அலட்சியம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போட்ட நெ.சா.துறை

காஞ்சியில் 2 இடங்களில் மேம்பாலம் கட்டாமல் அலட்சியம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போட்ட நெ.சா.துறை

காஞ்சியில் 2 இடங்களில் மேம்பாலம் கட்டாமல் அலட்சியம் நடவடிக்கை இன்றி கிடப்பில் போட்ட நெ.சா.துறை

ADDED : ஜூலை 27, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பாலம் கட்ட வேண்டிய தேவை அதிகாக இருந்த இடங்களில், பொன்னேரிக்கரை ரயில்வே கடவுப்பாதை முதன்மையானதாக இருந்தது.

தினமும் ரயில் கடந்து செல்லும் நேரங்களில், பல கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுந்து நின்றன. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருந்ததால், 50 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில் நிலையம் அருகே, பொன்னேரிக்கரையில் புதிய மேம்பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது.

அடுத்தபடியாக, காஞ்சிபுரம் கரியன்கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டு நான்காண்டுகள் ஆன நிலையில், ரயில்வே துறையும், நெடுஞ்சாலை துறையும் போதிய நடவடிக்கை எடுக்காததால், மேம்பாலம் திட்டம் கிடப்பில் உள்ளது.

காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில், வெள்ளைகேட் செல்லும் வழியில் உள்ள கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதை வழியாக அரக்கோணம், திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்லவும், அந்த பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வரவும், இந்த சாலையே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே கடவுப் பாதையில், ஒவ்வொரு நாளும் ரயில் செல்லும் நேரங்களில், நீண்ட நேரம் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடிப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2018 ஜூன் 11ம் தேதி அ.தி.மு.க., ஆட்சியில், கரியன்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 28ம் தேதி மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

மேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு, 42.51 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதில் பெரும்பகுதி இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

கரியன்கேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட, நேர்கோட்டு வரைபடம் தயார் செய்யப்பட்டு, 2019 நவம்பரில், ரயில்வே துறையின் அனுமதிக்காக, நெடுஞ்சாலைத் துறையின் செங்கல்பட்டு கோட்ட அதிகாரிகள் அனுப்பினர்.

அந்த கோப்புகள் ரயில்வே நிர்வாகத்திடம் கிடப்பில் உள்ளது. ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெற்ற பின் தான், நெடுஞ்சாலைத் துறை, மேம்பாலம் கட்ட ஆகும் செலவு குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்புவர்.

அதன்பின், மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவங்கும். ஆனால், பாலம் கட்டுவதற்கான அனுமதி வழங்க ரயில்வே துறையும், நெடுஞ்சாலை துறையும் மெத்தனமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த பாலம் போன்றே, வாலாஜாபாத் பகுதியில், பாலாறு குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாலாஜாபாத் - அவலுார் இடையே பாலாறு தரைப்பாலம் உள்ளது.

இந்த பாலத்தை கடந்து தான், அவலுார், கம்மராஜபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வர முடியும். கடந்த 2021ல் பெய்த பெருமழையின்போது, 1 லட்சம் கனஅடி நீர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடியது.

அப்போது, பாலாறு தரைப்பாலம் முழுதும் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ஏராளமான கிராமவாசிகள், 20 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிராமங்களில் இருந்து வாலாஜாபாத் பேரூராட்சிக்கு வர முடியாமலும், வாலாஜாபாத்தில் இருந்து கிராமங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, 2.50 கோடி ரூபாயில், தற்காலிகமாக வாலாஜாபாத் பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்து, தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து துவங்கியது.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், நிரந்தர தீர்வு வேண்டும் என்பதற்காக, பாலாறு குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கு, நெடுஞ்சாலை துறையினர், 100 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, மேம்பாலம் கட்டுவதற்கான கருத்துரு அனுப்பினர். ஆனால், மேம்பால திட்டம், இதுவரை கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.

தரைப்பாலத்தை சீரமைக்க 2.50 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீடு செய்து, போக்குவரத்து சீராகிவிட்டது. இதனால், உடனடியாக மேம்பாலம் கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பில்லை.

மேம்பாலம் கட்ட 100 கோடி ரூபாய் என்பது அதிக நிதி என்பதால், அடுத்து வரும் ஆண்டுகளில் தான் அரசு நிதி வழங்க வாய்ப்புள்ளது.

நெடுஞ்சாலை துறை அதிகாரி,

காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us