ADDED : ஜூலை 20, 2024 02:56 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும் எனவும், காட்டு பன்றிகளால் நெல் பயிர் சேதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மேலும், சென்னை - -பெங்களூரு விரைவு சாலை பணிகளால், பாசன கால்வாய்கள் சேதமடைந்து விட்டதாகவும், தனியார் கடைகளில் விதை தரமானதாக இல்லை எனவும் விவசாயிகளும், சங்க பிரதிநிதிகளும் புகார் தெரிவித்தனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு பதில் அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், வையாவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், ஏழு விவசாயிகளுக்கு 3.67 லட்சம் ரூபாய் பயிர் கடனும், முத்தியால்பேட்டை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நான்கு பேருக்கு 1.44 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும் வழங்கப்பட்டது.
மேலும், வேளாண் துறை சார்பில், ஐந்து பேருக்கு, 15,000 ரூபாய் மதிப்பில் விதைப்பு கருவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இதில், திட்ட இயக்குனர் ஜெயகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.