/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாதை வசதி இல்லாததால் பட்டா கிடைப்பதில் சிக்கல் பாதை வசதி இல்லாததால் பட்டா கிடைப்பதில் சிக்கல்
பாதை வசதி இல்லாததால் பட்டா கிடைப்பதில் சிக்கல்
பாதை வசதி இல்லாததால் பட்டா கிடைப்பதில் சிக்கல்
பாதை வசதி இல்லாததால் பட்டா கிடைப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 28, 2024 01:29 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சி, சீட்டணஞ்சேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக 32 இருளர் குடும்பத்தினர், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இப்பகுதி இருளர் குடும்பத்தினருக்கு அப்பகுதியில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் மனை பட்டா வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊராட்சிக்கு சொந்த மான தோப்பு புறம்போக்கு நிலத்தை சுற்றிலும், அப்பகுதி தனியார் விவசாய நிலங்கள் மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான காளீஸ்வரர் கோவில் நிலம் உள்ளது.
இருளர்களுக்கு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தோப்பு புறம்போக்கு நிலத்திற்கு செல்ல ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பாதை வசதி மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது.
பாதை ஏற்படுத்தும் அப்பகுதியில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான ஒரு சென்ட் நிலம் கைப்பற்ற வேண்டி உள்ளது. இதற்கு அறநிலையத் துறை சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், இப்பகுதி இருளர் மக்களுக்கு தோப்பு புறம்போக்கு நிலத்தில் மனை பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி இருளர்கள் புலம்புகின்றனர்.
இதனிடையே பாதை ஏற்படுத்தும் பகுதியில் உள்ள காளீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டிலான நிலத்தை அறநிலையத்துறை உத்திரமேரூர் ஒன்றிய தனி வட்டாட்சியர் ராஜம்மாள், செயல் அலுவலர் அமுதா உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
அறநிலையத் துறை செயல் அலுவலர் அமுதா கூறுகையில், 'சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பயன்பாட்டுக்கு எடுப்பது குறித்து, அறநிலையத் துறை ஆணையரிடம் ஊராட்சி நிர்வாகம் அனுமதி பெற்று அதன்பின் பணி மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்' என்றார்.