/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி மேயரை மாற்றுவதில் அதிருப்தி கவுன்சிலர்கள் உறுதி 2 சுற்று பேச்சுக்கு பிறகும் பிடிவாதம் காஞ்சி மேயரை மாற்றுவதில் அதிருப்தி கவுன்சிலர்கள் உறுதி 2 சுற்று பேச்சுக்கு பிறகும் பிடிவாதம்
காஞ்சி மேயரை மாற்றுவதில் அதிருப்தி கவுன்சிலர்கள் உறுதி 2 சுற்று பேச்சுக்கு பிறகும் பிடிவாதம்
காஞ்சி மேயரை மாற்றுவதில் அதிருப்தி கவுன்சிலர்கள் உறுதி 2 சுற்று பேச்சுக்கு பிறகும் பிடிவாதம்
காஞ்சி மேயரை மாற்றுவதில் அதிருப்தி கவுன்சிலர்கள் உறுதி 2 சுற்று பேச்சுக்கு பிறகும் பிடிவாதம்
ADDED : ஜூன் 19, 2024 11:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். இவரது கணவர் யுவராஜ், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். மகாலட்சுமி மற்றும் யுவராஜ் மீது, தி.மு.க., கவுன்சிலர்கள் ஓராண்டாக கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதன் காரணமாக அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் கைகோர்த்துள்ள தி.மு.க., கவுன்சிலர்கள், மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அ.தி.மு.க., - தி.மு.க., என 33 கவுன்சிலர்கள், மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அதிருப்தியில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு நேற்று முன்தினம் சமாதான பேச்சு நடத்தினார்.
இதில், இறுதி முடிவு எட்டப்படாததால், இரண்டாவது கட்டமாக, காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் மாவட்டச் செயலர் சுந்தர் தலைமையில் நேற்று சமரச பேச்சு நடந்தது.
இதில், மேயர் மகாலட்சுமி, அவரது கணவர் யுவராஜ் மற்றும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. அதிருப்தியில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் பங்கேற்றனர்.
மேயர் மகாலட்சுமியை மாற்ற வேண்டும் என்பதில், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரண்டாம் கட்ட பேச்சிலும், முடிவு எட்டப்படவில்லை.
மாநகராட்சியில் உள்ள 33 தி.மு.க., கவுன்சிலர்களில், 20 பேர் போர்க்கொடி துாக்கியுள்ளதால், மேயர் மகாலட்சுமி, அவரது கணவர் யுவராஜ், மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறையில் சென்ற மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் நேற்று பணியில் சேர்ந்துள்ளார்.
மாநகராட்சி கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர் என்ற முறையில், மேயரின் கணவர் யுவராஜ், இளைஞர் அணியின் செயலரும், அமைச்சருமான உதயநிதியிடம் இப்பிரச்னையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.