ADDED : ஜூலை 20, 2024 05:48 AM

ஸ்ரீபெரும்புதுார், : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்போடை கிராமத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டி துவக்கப்பட்டது. இந்த நிலையில், கிராம எல்லையில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், புதிதாக வீடு கட்டி குடியேறினர்.
அப்பகுதிக்கு, சுவாமி ஊர்வலம் கொண்டு வர வேண்டுமென, அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு, திருவிழா குழு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.
அதன்படி, நேற்று மாலை அங்கு சென்ற ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் சதீஷ் மற்றும் ஸ்ரீபெரும்புதுர் ஏ.எஸ்.பி., உதயகுமார் கிராம மக்களிடம் பேச்சு நடத்தப்பட்டு, வழக்கம் போல் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.