Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி அருகே குடிநீரில் தொற்று: இருவர் உ யிரிழப்பு 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காஞ்சி அருகே குடிநீரில் தொற்று: இருவர் உ யிரிழப்பு 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காஞ்சி அருகே குடிநீரில் தொற்று: இருவர் உ யிரிழப்பு 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

காஞ்சி அருகே குடிநீரில் தொற்று: இருவர் உ யிரிழப்பு 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ADDED : ஜூன் 15, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் சப்ளையான குடிநீரில் நோய்த்தொற்று இருந்ததால், 30க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். இரு மூதாட்டிகள் இறந்தனர்; பாதிக்கப்பட்ட மேலும் 15 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இப்பிரச்னையில், ஊராட்சி செயலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்டது வையாவூர் ஊராட்சி.

இங்குள்ள காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அசுவணி, 91, என்ற மூதாட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். மறுநாள் அதிகாலை, உடல்நிலை மோசமடைந்து வீட்டிலேயே இறந்தார்.

இவரை தொடர்ந்து, அதே ஊரில், டேங்க் தெருவில் வசித்து வந்த, சரோஜா, 80, என்பவருக்கும் நேற்று முன்தினம் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வீட்டிலேயே இறந்தார். கடந்த இரு நாட்களில், கிராமத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று சிலர் வீடு திரும்பினர். ஆனால், சிற்றரசன், 60, தரணியம்மாள், 70, ரூபாவதி, 70, மீனா, 45, ஏழுமலை, 41 உள்ளிட்ட 15 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வையாவூர் காலனி பகுதியில் திறந்தவெளி குடிநீர் கிணறு உள்ளது. அதிலிருந்து தான், இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து வீடுகளுக்கு அன்றாடம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

குடிநீருக்கு பயன்படுத்திய கிணறு திறந்தவெளியாக, பாதுகாப்பின்றி இருந்துள்ளது. பாதுகாப்பின்றி உள்ள கிணற்றை மூடி பாதுகாப்பான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும் என, கிராமத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குடிநீரில் தான் பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர். குடிநீரில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக, பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த ஊராட்சியின் தலைவராக ஜெயலட்சுமி என்பவர் உள்ளார். ஊராட்சி செயலராக பாஸ்கர் என்பவர் பணியாற்றி வந்தார்.

வாந்தி, வயிற்றுப்போக்கில் இருவர் இறந்த நிலையில், ஊராட்சியின் சுகாதார பணிகளை சரிவர கவனிக்காத ஊராட்சி செயலர் பாஸ்கரை, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டதால், சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இந்த கிராமத்தில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மருத்துவ முகாமில், கிராமவாசிகளுக்கு பரிசோதனைகள் நடத்தினர்.

ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் ஜெயகுமார், கோட்டாட்சியர் கலைவாணி ஆகியோர் சுகாதார பணிகளை முடுக்கிவிட்டனர். கிராமத்தில் உள்ள திறந்தவெளி கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிராமம் முழுதும் பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது.

ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி நேரில் வராமல், அவருக்கு பதிலாக, அவரது கணவர் நீலகண்டனே அனைத்து பிரச்னைகளையும் கையாண்டார்.

வையாவூர் காலனி பகுதியில் பயன்பாட்டில் உள்ள இரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் திறந்து விடப்பட்டு, ஊராட்சி சார்பில் குளோரினேஷன் செய்யப்பட்டது. அதிலிருந்து, வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதும் நிறுத்தப்பட்டது.

அருகில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி டேங்கர் லாரி மூலம், கிராமத்தினருக்கு தற்காலிகமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்

குடிநீர் மாதிரிகளை எடுத்து, கிண்டியில் உள்ள தண்ணீர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அதில் உள்ள கிருமி பற்றி மூன்று நாட்களில் தெரியவரும். கிராமத்தில் இரு மருத்துவ முகாம்கள் வாயிலாக, 34 பேரை பரிசோதனை செய்ததில், இரு குழந்தைகள் உட்பட 11 பேருக்கு லேசான வயிற்றுப்போக்கு இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

- த.ரா.செந்தில்,

காஞ்சி மாவட்ட சுகாதார அலுவலர்.

நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. ஏரி நிரம்பிய பின், வையாவூர் கிராம ஏரியிலும் கழிவுநீர் கலக்கிறது. எங்கள் ஊரில் 1978ல், வெட்டப்பட்ட கிணறு பயன்பாட்டில் உள்ளது. அதை 22 ஆண்டுகளாக துார் வாரி சுத்தம் செய்யவில்லை. திறந்தவெளி கிணறாகவும் இருப்பதால், எலி, பாம்பு, புறா போன்றவை விழுந்து இறக்கின்றன. கிணற்றை மூடி, ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.

- இ.இருசப்பன், 55,

வையாவூர் காலனி.

இரு மூதாட்டிகளும் ஏற்கனவே உடல்நிலை பாதிப்படைந்து சிகிச்சையில் இருந்தனர். மூதாட்டி அசுவணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதேபோல், உயிரிழந்த சரோஜா ஏற்கனவே இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இருவரும் வயிற்றுப்போக்கு காரணமாக இறக்கவில்லை. இருவரும் வயது முதுமை காரணமாக இறந்தனர்.

- கலைச்செல்வி,

கலெக்டர், காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us