/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாஜி அறங்காவலருக்கு கொலை மிரட்டல் காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது வழக்கு மாஜி அறங்காவலருக்கு கொலை மிரட்டல் காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது வழக்கு
மாஜி அறங்காவலருக்கு கொலை மிரட்டல் காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது வழக்கு
மாஜி அறங்காவலருக்கு கொலை மிரட்டல் காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது வழக்கு
மாஜி அறங்காவலருக்கு கொலை மிரட்டல் காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது வழக்கு
ADDED : ஜூன் 18, 2024 05:05 AM
சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்,58; ஆன்மிக மாதம் இதழ் ஒன்றின் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இவர், 2002 முதல் 2009 வரை, மண்ணடி, தம்பு செட்டி தெருவிலுள்ள காளிகாம்பாள் கோவிலில் அறங்காவலராக இருந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், காளிகாம்பாள் கோவில் நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில், அக்கோவில் தலைமை பூசாரியாக உள்ள காளிதாஸ் என்பவர், பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பணம், தங்க நகைகளை அவரே எடுத்துக் கொள்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம், காளிதாசிடம் விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் விஸ்வநாதன், திருவல்லிக்கேணி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
காளிகாம்பாள் கோவில் தலைமை பூசாரி காளிதாஸ், பக்தர்கள் அளிக்கும் தங்க நகை, பணத்திற்கு கணக்கு காட்டாமல், அவரே எடுத்துக் கொள்வதாக, கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன்.
இதில், காளிதாசுக்கும் எனக்கும் முன்விரோதம் உள்ளது. எனக்கு மறைமுகமாக மிரட்டல் வந்தது. கடந்த 15ம் தேதி இரவு 8:30 மணியளவில், அண்ணாசாலை மன்றோ சிலை அருகே செல்லும் போது, மர்ம நபர்கள் நால்வர்,'பைக்'கில் வந்து, வழிமறித்து தகராறு செய்தனர்.
தகாத வார்த்தையால் என்னை திட்டி,'காளிதாஸ் குறித்து அவதுாறு பரப்ப போகிறாயா' எனக் கூறி, கூர்மையான ஆயுதங்களை காட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். மேலும் காளிதாஸ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, பெண் ஒருவரின் வாழ்க்கையை சீரழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.
கார்த்திக் முனுசாமிக்கு, காளிதாஸ் சிறிய தந்தை என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.