Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/  தடை விதித்த பிளாஸ்டிக் பயன்பாடால்...அபாயம்!: நீர்நிலை மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு

 தடை விதித்த பிளாஸ்டிக் பயன்பாடால்...அபாயம்!: நீர்நிலை மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு

 தடை விதித்த பிளாஸ்டிக் பயன்பாடால்...அபாயம்!: நீர்நிலை மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு

 தடை விதித்த பிளாஸ்டிக் பயன்பாடால்...அபாயம்!: நீர்நிலை மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு

ADDED : ஜூன் 26, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:இல்லாததால், பிளாஸ்டிக்கின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கழிவுகளால், நீர்நிலை மாசடைவதோடு, சுற்றுச்சூழலும்பாதிப்படையும் சூழல் உருவாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை, 2022ம் ஆண்டு, ஏப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய வாழை இலை, மந்தார இலை உள்ளிட்ட பல விதப்பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து, அபராதம் விதிக்க, மாவட்டம் முழுதும், 11 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுவின் தலைவர்களாக மாநகராட்சி கமிஷனர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயலர்கள், நகராட்சி கமிஷனர்கள் ஆகியோரை நியமிக்கப்பட்டனர்.

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தபோது ஒரிரு மாதம் வரை, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிக்கு என நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர், அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். உணவகம், பல சரக்கு மளிகை கடை, பூக்கடை, பழக்கடை, காய்கறி கடைகளில் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தி கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து வியாபாரிகளிடம் அபராதம் வசூலித்தனர்.

கண்காணிப்பு குழுவினரின், தீவிர நடவடிக்கையால், மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான உணவகங்களில் உணவு பார்சல் கட்டுவதற்கு வாழை இலை, சில்வர் கவர், துணி பைகளை பயன்படுத்தினர். பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சாம்பார் வாங்குவதற்கு, பாத்திரம் எடுத்து வரும் அறிவுறுத்தப்பட்டனர்.

அதேபோல, பலசரக்கு மளிகை கடைகளில் பிளாஸ்டிக் கவருக்கு மாற்றாக வந்துள்ள மக்கும் கவரில் பார்சல் வழங்கப்பட்டு வந்தது. சிக்கன் மட்டன் சென்டர்களிலும்,

மந்தாரை இலை பயன்படுத்தி வந்தனர்.

இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைந்தது. ஆனால், தற்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியில் கண்காணிப்பு குழுவினரின் கெடுபிடி தளர்ந்துள்ளதால், காஞ்சிபுரம் நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் பெட்டிக்கடைகளில், மதுபானம் குடிக்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், காஞ்சிபுரம் டாஸ்மாக் கடை சுற்றியுள்ள பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள், காலி குடிநீர் பாட்டில்கள் குவிந்து கிடப்பதை காண முடிகிறது.

அதேபோல், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், பேருந்து நிலையம் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் தாரளமாக பயன்பாட்டில் உள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை சேகரித்து கொட்டப்படும், திருவீதிபள்ளம் குப்பை கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களே அதிகம் குவிந்துள்ளது.

மழைநீர் வெளியேறுவதாக அமைக்கப்பட்ட மஞ்சள் நீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயிலும், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக காண முடிகிறது.

எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் மீது, காஞ்சிபுரம் மாநகராட்சி கண்காணிப்பு குழுவினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு அவசியம்


பல சரக்கு மளிகை கடை, காய்கறி, பழம், பூ வாங்க கடைக்கு வரும் பொதுமக்கள் கையை வீசிக் கொண்டு வருகின்றனர். கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பை எடுத்து வரவில்லை. கவரில் போட்டு கொடுங்கள் என்கின்றனர். கவர் இல்லை என தெரிவித்தால், வேறு கடைக்கு சென்று விடுகின்றனர்.

இதனால், வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, கடைக்கு செல்லும் பொதுமக்களும் அவசியம் கைப்பை எடுத்து செல்ல வேண்டும்.

--- என்.ஜெயசந்திரன்

வறுகடலை மண்டி உரிமையாளர், காஞ்சிபுரம்.

வாரந்தோறும் ஆய்வு


மாநகராட்சி அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினரும் இணைந்து வாரந்தோறும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம்.

டாஸ்மாக் கடை அருகில் உள்ள அனைத்து பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்பாட்டில் உள்ளதா என, ஆய்வு செய்து பறிமுதல் செய்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

- - மாநகராட்சி அதிகாரி,

காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us