Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தண்ணீர் வெளியேற வழியில்லாததால் சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை

தண்ணீர் வெளியேற வழியில்லாததால் சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை

தண்ணீர் வெளியேற வழியில்லாததால் சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை

தண்ணீர் வெளியேற வழியில்லாததால் சிறு மழைக்கே குளமான நெடுஞ்சாலை

ADDED : ஜூன் 08, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
இந்தியாவின் முதன்மை சாலைகளில் ஒன்றாக சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும் உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து என, தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை - மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., சாலை, 2018-ம் ஆண்டு இறுதியில் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

மாநில நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ., சாலை விரிவாக்க பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜா வரையிலான 71 கி.மீ., விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

கடந்த 2018ல் துவக்கப்பட்ட பணிகள், 2021-ம் ஆண்டிற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.

இதில், திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே நீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் நீர் வெளியேற வழியில்லாததால், சாலையோரம் மழைநீருடன் கழிவுநீரும் கலக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று பெய்த சிறு மழையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதற்கு, தேசிய நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us