ADDED : ஜூன் 25, 2024 06:18 AM

காஞ்சிபுரம், : கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து நேற்று, காஞ்சிபுரம் காவலன்கேட் பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காஞ்சிபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில், 57 பேர் இறந்துள்ளனர். மேலும், 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, பன்னீர்செல்வம், பழனி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிலர், காஞ்சிபுரம் தாலுகா அருகே, காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை, சிவகாஞ்சி போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலை விடுவித்தனர்.