Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 2,646 பேருக்கு 6 மாதமாக பணம் விடுவிக்காமல்...அடம் !:கழிப்பறை கட்டியவர்கள் கடனாளியாகும் அவலம்

2,646 பேருக்கு 6 மாதமாக பணம் விடுவிக்காமல்...அடம் !:கழிப்பறை கட்டியவர்கள் கடனாளியாகும் அவலம்

2,646 பேருக்கு 6 மாதமாக பணம் விடுவிக்காமல்...அடம் !:கழிப்பறை கட்டியவர்கள் கடனாளியாகும் அவலம்

2,646 பேருக்கு 6 மாதமாக பணம் விடுவிக்காமல்...அடம் !:கழிப்பறை கட்டியவர்கள் கடனாளியாகும் அவலம்

ADDED : ஜூலை 13, 2024 11:05 PM


Google News
காஞ்சிபுரம்:தனி நபர் கழிப்பறை கட்டும் பணிக்கு, ஆறு மாதங்களாக நிதி விடுவிக்க முடியாது என, திட்ட இயக்குனர் அடம் பிடித்து வருகிறார். இதனால், கழிப்பறை கட்டியவர்கள் கடனாளியாகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டாரங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகள்தோறும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றுவதற்கு, தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டம் 2012- - 13ல் துவக்கப்பட்டது.

இதற்கு, 'நிர்மல் பாரத் அபியான்' திட்டத்தில், தனி நபர் கழிப்பறை மற்றும், 2014 ஆண்டு முதல் துாய்மை பாரத இயக்கம்; 2021- - 22ம் நிதி ஆண்டு துாய்மை பாரத இயக்கம்- - 2 ஆகிய திட்டங்களின் மூலமாக கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புலம்பல்


நிர்மல் பாரத இயக்கத்தில், தனி நபர் கழிப்பறை கட்டும் பயனாளி பங்களிப்பாக, 900 ரூபாய். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 4,500 ரூபாய். நிர்மல் பாரத் அபியான் திட்டத்தில், 5,700 ரூபாய் என, மொத்தம், 11,100 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீடு, தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு போதுமானதாக இல்லை என, தனி நபர் கழிப்பறை கட்டும் பயனாளிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தியது.

இதையடுத்து, துாய்மை பாரத இயக்கத்தில், 60 சதவீத மத்திய அரசு பங்களிப்பு மற்றும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பு என, 100 சதவீத மானியமாக தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு, 12,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தன.

அதே தொகையை, துாய்மை பாரத இயக்கம்- 2ல் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு, 12,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றன.

கிராமங்களில், கழிப்பறை கட்டும் பெரும்பாலான பயனாளிகள், ஒரு குழியில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி மட்டுமே கட்டி உள்ளனர்.

இடம் பற்றாக்குறை, மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு குழிகள் எடுத்து, தனி நபர் கழிப்பறை கட்டடம் கட்டுவதில்லை. ஒரு குழியில் கழிவுநீரை சேகரிக்கும் தொட்டியை மட்டுமே கட்டுகின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர், தனி நபர் கழிப்பறை கட்டிய பயனாளிகளுக்கு, பணம் விடுவிக்க முடியாது என, ஆறு மாதமாக அடம் பிடித்து வருகிறார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,கள் தனி நபர் கழிப்பறை பில் தொகை விடுவிக்க அறிவுரை வழங்கியும், அவர்களின் வார்த்தைக்கு செவி சாய்க்கவில்லை என, பயனாளி இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

காத்திருப்பு


உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், துாய்மை பாரத இயக்கம்- 2ல் 2020- - 21; 2021- - 22; 2022- - 23 ஆகிய மூன்று நிதி ஆண்டில், 15,779 பேர் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு வலைதளத்தில், பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், 13,025 பேர்களுக்கு தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு, நிர்வாக அனுமதி மற்றும் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளன.

இதில், 10,563 பயனாளிகள் தனி நபர் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில், 7,945 பயனாளிகளுக்கு பணம் விடுவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2,646 பேர்களுக்கு பணம் விடுவிக்கவில்லை.

இதனால், கடனை வாங்கி தனி நபர் இல்ல கழிப்பறை கட்டியவர்களுக்கு, 3.17 கோடி ரூபாய் கிடைக்காமல், ஆறு மாதங்களாக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தனி நபர் கழிப்பறை கட்டுதற்கு, இரு குழிகள் அடங்கிய கழிவுநீர் சேமிப்பு தொட்டி கட்ட வேண்டும். பயனாளிகள், ஒரு குழி கழிவுநீர் சேமிப்பு தொட்டியை கட்டுகின்றனர்.

இரண்டாவதாக, கட்டி முடித்துவிட்டு வாருங்கள் பணத்தை முழுமையாக விடுவிக்கிறோம் என, கூறுகிறோம். யாருடைய பணி ஆணையும் ரத்து செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலுவை விபரம்:


வட்டாரம் பயனாளிகள் எண்ணிக்கை
காஞ்சிபுரம் 530
குன்றத்துார் 400
ஸ்ரீபெரும்புதுார் 33
உத்திரமேரூர் 1,174
வாலாஜாபாத் 509
மொத்தம் 2,646







      Our Apps Available On




      Dinamalar

      Follow us