/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோவிலுார் பெரிய ஏரி... சீரமைக்கப்படுமா? பூங்கா அமைத்து படகு சவாரி துவக்க கோரிக்கை ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோவிலுார் பெரிய ஏரி... சீரமைக்கப்படுமா? பூங்கா அமைத்து படகு சவாரி துவக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோவிலுார் பெரிய ஏரி... சீரமைக்கப்படுமா? பூங்கா அமைத்து படகு சவாரி துவக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோவிலுார் பெரிய ஏரி... சீரமைக்கப்படுமா? பூங்கா அமைத்து படகு சவாரி துவக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோவிலுார் பெரிய ஏரி... சீரமைக்கப்படுமா? பூங்கா அமைத்து படகு சவாரி துவக்க கோரிக்கை
ADDED : ஜூன் 07, 2025 01:31 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப்படுத்தி, கரையில் பொழுது போக்கு பூங்கா அமைத்து, படகு சவாரியை துவக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கோவிலுார் தென்பெண்ணை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த பகுதியில்
நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஊருக்கு மத்தியில் ஆங்காங்கே குளங்கள், திருக்கோவிலுார்-சந்தப்பேட்டையை இணைக்கும் வகையில் பெரிய ஏரி, என திட்டமிட்டு, நகரம் உருவாக்கப்பட்டது.
வானுயர்ந்த கோபுரங்கள், ஆண்டு முழுவதும் நீர் நிறைந்திருக்கும் ஏரி வழியாக செல்பவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும். மேலும், ஏரியின் மத்தியில் இருக்கும் மரங்கள், கூடு கட்டி வாழும் கொக்கு, நாரை, நீர்க்கோழி என ஏராளமான பறவைகளுக்கு இருப்பிடமாக இருந்தன. ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. இந்த ஏரிக்கரை சாலையின் இரு பக்கமும் மீன்கடைகள் உள்ளிட்டவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மாடு, கோழி, மீன் கழிவுகளை கொட்டிக் குவிப்பதால், ஏரியே குப்பைகளின் கூடாரமாக மாறி விட்டது. அதுமட்டுமின்றி, சந்தப்பேட்டை பகுதியின் கழிவுநீர், இந்த ஏரியில் தான் கலக்கிறது.
மேலும் ஏரியில் மீன் வளர்ப்பவர்களும், அதற்கு உணவாக கருதி கழிவுகளை ஏரியில் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர்.
ஏரி நீரின் பாசன பரப்பு சுருங்கி விட்டதால் விவசாயிகளின் கண்காணிப்பும் குறைந்து விட்டது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் வெட்டப்படுவதில்லை. இதனால் ஏரியும் அவ்வப்போது வற்றி விடுகிறது. இந்த பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ' ஏரிக்கரை பகுதியில் சென்றாலே, துர்நாற்றம் வீசுகிறது. அதனால் திருக்கோவிலுார்- சந்தப்பேட்டை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். ஏரியில் முளைத்துள்ள முள் மரங்களை அகற்றி, துார்வாரி சாலையை விரிவுபடுத்தி, நடைபாதை ஏற்படுத்தி பயன் தரும் மரக்கன்றுகளை நடவேண்டும்,' என்றனர். இந்த ஏரியை புனரமைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைத்து, படகு சவாரியை துவக்கினால், இந்த பகுதியே மிகச்சிறந்த சுற்றலா தளமாக மாற வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'இங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டால் காலை, மாலை வேளைகளில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படும்.
படகு சவாரி மூலம் பொதுப்பணித்துறைக்கும் வருவாய் கிட்டும். ஏரியில் குப்பைகளை கொட்டுவது தடுக்கப்பட்டு தூய்மையாகும். இதன் மூலம் நகரின் நுழைவுப் பகுதி அழகு பெறும். குளங்களும் ஆண்டு முழுவதும் நிரம்பி நகரின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.