Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பெரும் புள்ளிகளிடம் சிக்கி உள்ள பழமையான கோவில் நிலங்கள் மீட்கப்படுமா?: அதிகாரிகளின் 'குறட்டை'யால் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

பெரும் புள்ளிகளிடம் சிக்கி உள்ள பழமையான கோவில் நிலங்கள் மீட்கப்படுமா?: அதிகாரிகளின் 'குறட்டை'யால் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

பெரும் புள்ளிகளிடம் சிக்கி உள்ள பழமையான கோவில் நிலங்கள் மீட்கப்படுமா?: அதிகாரிகளின் 'குறட்டை'யால் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

பெரும் புள்ளிகளிடம் சிக்கி உள்ள பழமையான கோவில் நிலங்கள் மீட்கப்படுமா?: அதிகாரிகளின் 'குறட்டை'யால் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம்

ADDED : ஜூன் 13, 2025 03:57 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து மீட்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல கோவில்கள் உள்ளன.

திருக்கோவிலுாரில் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டேஸ்வரர், ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவில், ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில், ராஜநாராயண பெருமாள், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தென்பொன் பரப்பி சொர்ணபுரீஸ்வரர், எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர், பரிக்கல் லட்சுமி நரசிம்மர், கள்ளக்குறிச்சியில் சிதம்பரேஸ்வரர், தில்லை கோவிந்தராஜ பெருமாள், முடியனுார் ஆதி அருணாச்சலேஸ்வரர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர், ராவுத் தநல்லுார் ஆஞ்சநேயர் கோவில் உட்பட 50க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களுக்கு காலம் காலமாக பக்தர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக்கிடக்கின்றன.

எந்தெந்த கோவிலுக்கு எங்கு நிலம் உள்ளது என்பது குறித்த முறையான தகவலை அறநிலையத்துறை தனது பதிவேட்டில் வைத்துள்ளது.

ஆனால் அவற்றை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

விளை நிலங்களாக இருந்தால், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலம் விட்டு குத்தகைக்கு விடப்படுகிறது.

கடைகள் மற்றும் வீடு களும் வாடகைக்கு விடப்பட்டு, அறநிலையத்துறையில் வருவாயில் சேர்க்கப் படுகிறது. ஆனால் கோவிலுக்கு சொந்தமான இடங்களின் ஒரு பகுதி இன்னும் கண்டறியப்படாமலேயே உள்ளது.

சேதமடைந்துள்ள கோவில்கள்


வீரசோழபுரம் கோவிலுக்கு சொந்தமான 35.18 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தற்போது கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இன்னும் இந்த கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் விளை நிலங்கள் மீட்கப்படாமலே உள்ளன.

இவ்வளவு விளைநிலங்கள் கோவிலுக்கு சொந்தமாக இருந்த போதிலும் கோவிலின் சிதிலமடைந்த நிலை பக்தர்களை கவலை அடையச்செய்துள்ளது.

ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் ஒரு முறை விளைநிலங்கள் ஏலம் விடுவது என்பது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே உள்ளது. அதுவும் நன்கு விளையக்கூடிய நிலமாக இருந்தாலும் குறைந்த தொகைக்கு ஏலம் விடப்படுகிறது. அதேபோல் பல இடங்களில் கோவிலுக்கு சொந்தமான கடைகள் மிக குறைந்த வாடகைக்கு தனியாருக்கு விடப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மெத்தனம்


இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது:

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

ஆனால் கோவில் நிலங்கள் எங்கெங்கு உள்ளது என்பதை முறையாக கணக்கெடுப்பதற்கு கூட அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

மாவட்டத்திலுள்ள பழமையான கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் வெளியூர்களிலும் உள்ளன.

இவற்றை முறையான கணக்கீடு செய்து அவற்றை முழுமையாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும். பின்னர் அதற்கு உரிய தொகையை குத்தகை மற்றும் வாடகையை வசூலிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியப்புள்ளிகள் ஆக்கிரமிப்பு


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

'சிவன் சொத்து குல நாசம்' என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சில இடங்களில் முக்கிய புள்ளிகளே கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் அவற்றை மீட்க அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில், கலெக்டராக இருந்த கோபால், திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவில் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக பாரபட்சம் இன்றி அகற்றினார்.

அதன் பிறகு வந்த எந்த அதிகாரியும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை கண்டு கொள்ளவில்லை.

பாரம்பரியமான கோவில் களுக்கு சொந்தமான நிலம் மற்றும் இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பழமையான கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-நமது நிருபர்--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us