Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அரசு பள்ளியில் அரசுத் துறை அலுவலகங்கள் அகற்றப்படுமா? வகுப்பறை இன்றி கல்வி பாதிக்கும் அவலம்

அரசு பள்ளியில் அரசுத் துறை அலுவலகங்கள் அகற்றப்படுமா? வகுப்பறை இன்றி கல்வி பாதிக்கும் அவலம்

அரசு பள்ளியில் அரசுத் துறை அலுவலகங்கள் அகற்றப்படுமா? வகுப்பறை இன்றி கல்வி பாதிக்கும் அவலம்

அரசு பள்ளியில் அரசுத் துறை அலுவலகங்கள் அகற்றப்படுமா? வகுப்பறை இன்றி கல்வி பாதிக்கும் அவலம்

ADDED : ஜூலை 04, 2024 11:34 PM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பிற துறை அலுவலகங்கள் கடந்த மார்ச் மாதமே அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அகற்றப்படாததால் போதிய வகுப்பறையின்றி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகளின்றி 10க்கும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கரும்பலகை வசதிகூட இல்லாமல் மழை, வெயிலுக்கிடையே கல்வி பயின்று வந்தனர்.

மாணவர்களின் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன், நபார்டு வங்கி நிதியில் புதிதாக 20க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால், புதிய கட்டடத்தில் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு பயன்படுத்தப்படவில்லை.

தோட்டக்கலை, பதிவு, பொதுப்பணித்துறை மற்றும் ஆதார் பதிவு மையம் போன்ற அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அத்துடன் சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., அலுவலகம் சார்பில், மாவட்டம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள் வைக்கும் குடோனாகவும் வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதித்து வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியிடப்பட்டது.

அத்துடன் இந்த பள்ளியின் மேலாண்மைக்குழு சார்பிலும் பலமுறை கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டதுடன், உறுப்பினர்கள் பலரும் ராஜினாமா செய்வதாக கடிதமும் அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து முன்பிருந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ள பிற துறை அலுவலகங்கள் கடந்த மார்ச் 1ம் தேதிக்கு முன்பாக அகற்றப்படும் என உறுதி அளித்திருந்தார்.

ஆனால் ஒரு சில அலுவலகங்கள் மாற்றப்பட்ட நிலையில், பெரும்பாலான வகுப்பறைகளில் இன்னும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், பழையபடி வகுப்பறை இன்றி, மரத்தடியில் வெயிலிலும், மழையிலும் அமர்ந்து படிக்கும் நிலை தொடர்கிறது.

எனவே தற்போதுள்ள கலெக்டர் இது தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுத்து பள்ளி வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ள பிற துறை அலுவலகங்களை அகற்றி மாணவர்களின் கல்வி நலன் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us