Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி துவங்குவது... எப்போது? கரை உடைப்பு சரிசெய்து, வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி துவங்குவது... எப்போது? கரை உடைப்பு சரிசெய்து, வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி துவங்குவது... எப்போது? கரை உடைப்பு சரிசெய்து, வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

திருக்கோவிலுார் அணைக்கட்டு சீரமைப்பு பணி துவங்குவது... எப்போது? கரை உடைப்பு சரிசெய்து, வாய்க்கால்களை துார்வார கோரிக்கை

ADDED : செப் 01, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணை வேகமாக நிரம்பி வருவதால், எந்த நேரத்திலும் அணை திறக்க வாய்ப்பு உள்ள நிலையில், திருக்கோவிலுார் அணைக்கட்டை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக இருப்பது தென்பெண்ணையாறு. இதன் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை உள்ளது. தென்பெண்ணையாறு கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுப்பதால், தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் அணை நிரம்பி விடும்.

இந்த ஆண்டு பெண்ணையாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் சீரான மழை காரணமாக கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி உபரி நீர் மூலம் சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து துவங்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 347 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இதில் 5,965 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வழக்கமாக நவம்பர் மாதம் வரை 117 அடி பராமரிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்காக வெளியேற்ற வேண்டும். டிசம்பர் மாத துவக்கத்தில் தான் 119 அடி தண்ணீரை அணையில் முழுமையாக தேக்க வேண்டும் என்பது சட்ட விதி.

இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை விரைவில் 117 அடியை எட்டும். எனவே அணையிலிருந்து தண்ணீர் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். இது திருக்கோவிலுார் அணைக்கட்டு பாசனத்தில், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பெஞ்சல் புயல் வெள்ளத்தில் திருக்கோவிலுார் அணைக்கட்டின் ஒரு பக்க கரை உடைந்ததுடன், அணைக்கட்டின் 70 சதவீதம் சேதமடைந்தது. இதனை சீரமைப்பதில் அரசு காலதாமதம் செய்வது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நீர் வள ஆதாரத்துறை உயர்நிலைக் குழு அதிகாரிகள் அணையை ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில், அணையை சீரமைக்க 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதே பகுதியில் கடந்த 1972 ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டது.

இதனையும் கருத்தில் கொண்டு தற்போது 450 மீட்டர் நீளமுள்ள அணைக்கட்டை 150 மீட்டர் விரிவாக்கம் செய்து, 600 மீட்டர் தூரத்திற்கு அணையை புதுப்பிப்பதற்கான நவீன தொழில்நுட்ப அடிப்படையில் திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இப்பணியை துவக்கி முடிக்க வெகுநாட்கள் ஆகும்.

தற்போது சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், பம்பை வாய்க்காலில் வளர்ந்துள்ள புதர் செடிகளால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்காடு, கூடலுார், கல்பட்டு, மாம்பழப்பட்டு, கருங்காலிபட்டு, அயப்பாக்கம், புதுச்சேரி மாநிலம் வாதானுார் என 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் உருவாகி உள்ளது. அதேபோல் மலட்டாறு, ராகவன் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களிலும் புதர் மண்டி கிடைக்கிறது. இதன் காரணமாக 98 ஏரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும், 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள சம்பா பயிர் பாதிக்கும் சூழல் உள்ளது.

நீர்வளத்துறை இதனை கருத்தில் கொண்டு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்கும் நடவடிக்கையை ஒரு பக்கம் துரிதப்படுத்துவதுடன், தற்காலிக ஏற்பாடாக உடைந்திருக்கும் கரையை சீரமைத்து, தண்ணீர் கசிவை தடுத்து நிறுத்தி, பம்பை வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து கால்வாய்களையும் போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டும். தவறினால் சாத்தனுார் அணை திறக்கப்பட்டாலும், திருக்கோவிலுார் அணைக்கட்டு பாசன விவசாயிகள் பயன்பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். எனவே அணை சீரமைப்பு பணியை மாவட்ட நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us