/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுாரில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது எப்போது?: அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை திருக்கோவிலுாரில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது எப்போது?: அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
திருக்கோவிலுாரில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது எப்போது?: அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
திருக்கோவிலுாரில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது எப்போது?: அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
திருக்கோவிலுாரில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது எப்போது?: அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2025 03:21 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருக்கோவிலுாரை விழுப்புரத்தை போல உயர்த்தி காட்டுவேன், எனக்கூறி அந்த தொகுதியில், பொன்முடி எம்.எல்.ஏ., களம் இறங்கினார்.
அந்த தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து விட்டதால், எதுவும் செய்ய முடியில்லை எனக்கூறி கடந்த, 2021ம் ஆண்டு தேர்தலில், மீண்டும் அதே வாக்குறுதியை, மக்களிடம் கொடுத்து வெற்றி பெற்றார்.
நடப்பு ஆட்சியில் அவர் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப ரூ. 54 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல அரசு கலைக்கல்லுாரி ஏற்படுத்தப்பட்டு, அதற்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தொடர் குற்றச்சாட்டு
பேரூராட்சியாக இருந்த திருக்கோவிலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது தான் கேள்வி. மாறாக சொத்து வரி உயர்ந்ததுதான் மிச்சம் என, மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களே உள்ள நிலையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் திருக்கோவிலுார் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
குறிப்பாக, கீழையூர்-அரகண்டநல்லுாரை இணைக்கும் தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்திற்கு மாற்றாக ரூ.130 கோடியில் உயர்மட்ட பாலம்; திருக்கோவிலுார் அணைக்கட்டு ரூ.130 கோடியில் புனரமைப்பு; நாயனுாரில் சிட்கோ உருவாக்கம்; திருக்கோவிலுாரில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.
இத்துடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு விட்டன. ஆனால், திருக்கோவிலுார் புதிய பஸ் நிலையத்திற்கு, இன்றைக்கு தான் 'டெண்டர்' நடக்க உள்ளது. இதில் உயர்மட்ட பாலம் மற்றும் சிட்கோ பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன என தெரியவில்லை.
தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஒரு சில நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல் வடிவம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'கிடப்பில்' திட்டங்கள்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
திருக்கோவிலுாரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது.
பேரூராட்சியாக இருந்த போது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு வேறு நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கானல் நீராக உள்ளது.
ஏரியை சீரமைத்து நடைபாதை, பூங்கா, படகு சவாரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலணையில் கூட இல்லை.
திருக்கோவிலுாரில் அகழ்வாய்வு செய்யப்பட்ட, தொல்லியல் பொருட்கள் வாடகை கட்டடத்தில் பூட்டி வைக்கப்பட்டு, ஒட்டடை படிந்து இருக்கும் நிலையில் சொந்த கட்டடம் அமைத்து அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைப்பு பணி அரைகுறையாக அலங்கோலமாக கிடக்கிறது.
உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்ட நிலையில், வாகனம் நிறுத்துவதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. பக்தர்கள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லாமல் ஆக்கிரமிப்பு நகரை அபகரித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' திருக்கோவிலுார் மற்றும் 20 ஊராட்சிகள், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்படும், என்ற பொன்முடி எம்.எல்.ஏ.,வின் வாக்குறுதியின் நிலை என்னவென்றே தெரியவில்லை.
மக்களின் பல எதிர்பார்ப்புகள் முழுமை பெறாத நிலையில் தான், திருக்கோவிலுரின் இன்றைய நிலை உள்ளது. அதனால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.