/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/புதிய பஸ் நிலையம் கட்டப்படுவது... எப்போது? உளுந்துார்பேட்டை மக்கள் எதிர்பார்ப்புபுதிய பஸ் நிலையம் கட்டப்படுவது... எப்போது? உளுந்துார்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பஸ் நிலையம் கட்டப்படுவது... எப்போது? உளுந்துார்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பஸ் நிலையம் கட்டப்படுவது... எப்போது? உளுந்துார்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
புதிய பஸ் நிலையம் கட்டப்படுவது... எப்போது? உளுந்துார்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2024 11:16 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைந்து அதற்கான பணியை துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப்பகுதியாக உள்ளது. இதனால் உளுந்துார்பேட்டை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு பகலாக வந்து செல்வதால் பிசியான பகுதியாக இருந்து வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் இல்லாததால், சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் சென்றனர். பின் பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதனால், பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து சென்ற வண்ணம் இருந்தன.
ஆனால் காலப்போக்கில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசலில் உளுந்தார்பேட்டை நகரம் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.
இதன் காரணமாக பல சொகுசு பஸ்கள் உளுந்துார்பேட்டை பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்கின்றன.
சொகுசு பஸ்சில் பயணிக்கும் பயணிகளை உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியிலோ, அஜீஸ் நகர் பகுதியிலோ இறக்கி விடப்படுவதால் அங்கிருந்து மாற்று வாகனத்தில் உளுந்துார்பேட்டைக்கு வரவேண்டிய நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசலையும், போக்குவரத்து பாதிப்பையும் கருத்தில் கொண்டு உளுந்துார்பேட்டையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் புதிய பஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
பஸ் நிலையத்திற்கு 6 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என திட்டமிடப்பட்டு உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டான அருகே மற்றும் பு.மாம்பாக்கம் அருகே என 2 இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரசியல் கட்சியினரில் பலர் மற்றும் அதிகாரிகள் திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பஸ்கள் வந்து செல்வதற்கு அஜீஸ் நகர் ரவுண்டானா இடத்தில் அமைவதற்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே பஸ் நிலையம் கட்டுவதற்கு போதுமான இடவசதி உள்ளதா என்பதை அறிய வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள் அளவீடு செய்து சென்றனர். ஆனால் அஜீஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு சிலர், விளையாட்டு மைதானத்திற்கான இடம். அதனை பஸ் நிலையத்திற்கு எடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணியை பாதியிலேயே விட்டுச் சென்றனர். இப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் கலெக்டர் ஷ்ர்வன்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் புதிய பஸ் நிலையம் அமைவதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டதோடு, எப்போது புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் மற்றும் தமிழக அரசும், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.