Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பஸ் நிலையத்திற்கான இடம் தேர்வு எப்போது? உளுந்தூர்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு

பஸ் நிலையத்திற்கான இடம் தேர்வு எப்போது? உளுந்தூர்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு

பஸ் நிலையத்திற்கான இடம் தேர்வு எப்போது? உளுந்தூர்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு

பஸ் நிலையத்திற்கான இடம் தேர்வு எப்போது? உளுந்தூர்பேட்டை மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : பிப் 23, 2024 11:55 PM


Google News
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு பகலாக செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் இல்லாததால், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி சென்றனர்.

அதனைத் தொடர்ந்து, பஸ் நிலையம் கட்டப்பட்ட பின் பஸ்கள், நிலையத்திற்குள் வந்து சென்றன. ஆனால், காலப்போக்கில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சொகுசு பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் உளுந்துார்பேட்டை நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்கின்றன. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனைத் தவிர்க்க உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, மாற்று இடத்தில் பஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

பஸ் நிலையம் அமைப்பதற்கு 6 ஏக்கர் இடம் தேவைப்படும் என திட்டமிடப்பட்டு உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே மற்றும் பு.மாம்பாக்கம் அருகே என 2 இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பஸ்கள் வந்து செல்வதற்கு அஜீஸ் நகர் ரவுண்டானா இடத்தில் பஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள், மக்கள் பிரநிதிநிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதில் ஒரு சிலர் பு.மாம்பாக்கம் இடத்தில் பஸ் நிலையம் அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே பஸ் நிலையம் அமைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளதா என்பதை அறிய நேற்று முன்தினம் வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள் அளவீடு செய்யச் சென்றனர்.

ஆனால் அஜீஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு சிலர், விளையாட்டு மைதானத்தை பஸ் நிலையத்திற்கு எடுக்கக் கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணியை பாதியிலேயே விட்டுச் சென்றனர்.

ஒரு சிலரின் எதிர்ப்பால் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே பஸ் நிலையம் வருவது தடுக்கப்படுவதோடு பலரது ஆதரவுக்கு முட்டு கட்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அமைவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதோடு, எப்போது பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் பஸ் நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us