/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு கல்லுாரிக்கு போதிய பஸ் இல்லாமல் மாணவர்கள் அவதி: கூடுதல் பஸ்களை இயக்கி தீர்வு காண கோரிக்கை அரசு கல்லுாரிக்கு போதிய பஸ் இல்லாமல் மாணவர்கள் அவதி: கூடுதல் பஸ்களை இயக்கி தீர்வு காண கோரிக்கை
அரசு கல்லுாரிக்கு போதிய பஸ் இல்லாமல் மாணவர்கள் அவதி: கூடுதல் பஸ்களை இயக்கி தீர்வு காண கோரிக்கை
அரசு கல்லுாரிக்கு போதிய பஸ் இல்லாமல் மாணவர்கள் அவதி: கூடுதல் பஸ்களை இயக்கி தீர்வு காண கோரிக்கை
அரசு கல்லுாரிக்கு போதிய பஸ் இல்லாமல் மாணவர்கள் அவதி: கூடுதல் பஸ்களை இயக்கி தீர்வு காண கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 04:00 AM

கள்ளக்குறிச்சி: சடையம்பட்டு கோமுகி ஆற்றின் அருகே செயல்படும் அரசு கல்லுாரிக்கு செல்ல, போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இக்கல்லுாரி, பி.ஏ.,- தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி.,- கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் என 7 இளங்கலை பாடப்பிரிவுகள், எம்.ஏ.,- ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி.,- கணிதம், கணினி அறிவியல் என 4 முதுகலை பாடப்பிரிவுகளுடன் இயங்கி வருகிறது.
இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
தற்போது சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே புதிய கட்டடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. இக்கல்லுாரியில் வெளியூர்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.
அரசு கல்லுாரிக்கு சென்று வருவதற்கு அவ்வழித்தடத்தில் முறையாக பஸ் வசதியின்மையால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து பல்வேறு கோரிக்கைக்கு பின்பு காலை, மாலை ஆகிய இரு வேளைகளில், குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இருப்பினும் அவை போதுமானதாக இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாணவர்கள் பெரும்பாலானோர், கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் செல்லும் பஸ்சில் சென்று, காரனுார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து, 2 கி.மீ., துாரத்திற்கு ஏரி மற்றும் வயல்வெளிக்கு மத்தியில் உள்ள சாலை வழியாக நடந்து செல்கின்றனர்.
அதேபோல் சங்கராபுரம் மார்க்கத்திலிருந்து வரும் மாணவர்கள் ரோடுமாந்துார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து மோ.வன்னஞ்சூர், மோகூர் வழியாக சோமண்டார்குடி கோமுகி ஆற்றை கடந்து கல்லுாரிக்கு செல்கின்றனர். மழை காலங்களில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லுபோது நீண்டதுாரம் சுற்றி செல்ல நேரிடுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'போதிய பஸ் வசதியின்மையால் கல்லுாரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கல்லுாரியில் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் மாணவ மாணவிகள், அவர்களது பெற்றோர் உள்ளிட்டபெரும்பாலோனர் வேறுவழியின்றி கல்லுாரிக்கு நடந்தே சென்று வருகின்றனர். எனவே, கிராமப்புறங்களில் இருந்து படிக்கும் மாணவர்களின் நலன் கருதி கல்லுாரிக்கு போதிய அளவில் பஸ் வசதிக்கான ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.