ADDED : ஜன 04, 2024 11:51 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் சாம்பார் வெங்காய அறுவடை துவங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, பாலப்பட்டு, மோட்டாம்பட்டி,வடபாலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது வெங்காயம் செடி நன்கு வளர்ந்து விளைச்சலுக்கு தயார் நிலையில் உள்ளதால் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்,சென்னை,திருவண்ணாமலை,பெங்களூரு போன்ற ஊர்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் அறுவடை சமயத்தில் நேரில் வந்து வெங்காயத்தை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
அறுவடை தினத்தில் அலைச்சலின்றி கைமேல் காசு கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.35 முதல் விற்பனை செய்யப்படுகிறது.