/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு... குறைகிறது: பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் தவிப்பு மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு... குறைகிறது: பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் தவிப்பு
மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு... குறைகிறது: பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் தவிப்பு
மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு... குறைகிறது: பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் தவிப்பு
மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி பரப்பு... குறைகிறது: பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் தவிப்பு
ADDED : செப் 15, 2025 02:40 AM

தியாகதுருகம்: தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாமல் பொய்த்ததால், நெல் சாகுபடி பரப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறையும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இங்கு விளையும் வெள்ளை பொன்னி ரக அரிசி தனி சிறப்பு பெற்றதாகும். சம்பா பருவ சாகுபடியில் வெள்ளை பொன்னி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சம்பா பருவம் ஆக., மாதம் துவங்கி ஜன., மாதம் முடிவடைகிறது.
தென்மேற்கு பருவமழையின் அளவைப் பொறுத்து விதைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து விவசாயிகள் முடிவு செய்கின்றனர். துவக்கத்திலேயே கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பினால் சரியான பருவத்தில் விதைப்பணியை துவக்கி நடவு செய்து டிச., இறுதியில் அறுவடை செய்து விடுகின்றனர். குறிப்பாக பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே நெல் பயிருக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் பாய்ச்ச முடியும்.
கடந்த மே மாதம் பெய்த கோடை மழையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்தது. அதன் பிறகு ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை துவங்கியது. இது இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரப்போகிறது. இருப்பினும் இதுவரை எதிர்பார்த்த அளவு கன மழை பெய்யாததால் ஏரி குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கவில்லை.
இதனால் பெரும்பாலான நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்த அளவே காணப்படுகிறது. கிணறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இச்சூழ்நிலையில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிணற்றுப் பாசனம் மட்டுமின்றி அணை, ஏரி ஆகியவற்றின் ஆயக்கட்டு நிலங்களிலும் நெல் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய ஆறுகளிலும் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நெல் நடவு செய்யப்படும் பரப்பு மாவட்டத்தில் குறையும் சூழல் உருவாகியுள்ளது. கிணற்றுப் பாசனத்தை ஆதாரமாகக் கொண்ட நிலங்களில் மட்டுமே நெல் நாற்று விடுவதற்கான விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அணைகளின் கடைமடை நிலங்களிலும், ஏரி பாசன வயல்களிலும், நெல் சாகுபடியை துவங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தென்மேற்கு பருவ மழை முடியும் தருணத்திலாவது கன மழை பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்தால் நம்பிக்கையோடு சம்பா பருவ நெல் சாகுபடியை துவக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு 76 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் நெல் பயிரிடும் பரப்பு கணிசமாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் நெல் தானிய உற்பத்தியும் கடந்தாண்டை விட இவ்வாண்டு குறையும் என்று தெரிகிறது.