/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஊசி, மருந்துகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு! உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அவலம்ஊசி, மருந்துகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு! உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அவலம்
ஊசி, மருந்துகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு! உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அவலம்
ஊசி, மருந்துகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு! உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அவலம்
ஊசி, மருந்துகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு! உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அவலம்
ADDED : ஜூன் 11, 2025 07:02 AM

சேலம், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளின் மையப்பகுதியாக உளுந்துார்பேட்டை உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்புற மற்றும் வெளிப்புறநோயாளிகளாக, நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆனால் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக, போதிய எண்ணிக்கையில், டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் கிடையாது. இங்கு, 16 டாக்டர் பணியிடங்களில், 3 இடங்கள்; 14 செவிலியர் பணியிடங்களில், 2; மற்றும் 16 துப்புரவு பணியாளர்களில்; 9 பேர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த பற்றாக்குறையால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய உபகரணங்களும் மருத்துவமனையில் இல்லை. குறைந்தபட்சம் ஊசி கூட கையிருப்பு இல்லை.
நோயாளிகளிடம், வெளியில் உள்ள மருந்தகங்களில், ஊசி வாங்கி வரச்சொல்லி, அங்குள்ள மருத்துவ பணியாளர்கள் அலைக்கழிக்கின்றனர்.
அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளும், அங்குள்ள மருந்தகங்களில் கிடையாது. அந்த மருந்துகளையும், வெளியில் தனியார் மருந்தகங்களில் வாங்கிக்கொள்ள நோயாளிகளை நிர்பந்திக்கின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து நோயாளிகள் சிலர் கூறுகையில், 'இந்த பிரச்னை கடந்த பல மாதங்களாக உள்ளது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. நோயாளிகள், ஊசி போட சென்றால், வெளியில் ஊசி வாங்கி வர சொல்கின்றனர். அதை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கவில்லை எனில், ஊசி போட மறுத்து விடுகின்றனர். அதேபோல, டாக்டர் மற்றும் செவிலியர்கள் போதிய அளவில் பணியில் இருப்பதில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
இந்த விவகாரம் குறித்து, அரசு மருத்துவமனை டாக்டரிடம் கேட்ட போது, 'சர்க்கரை நோயாளிகளுக்கான மாத்திரையில் எந்த மாத்திரை இல்லை என கூறினால் அதை வரவழைத்து வழங்க தயாராக இருக்கிறோம்.
நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
இந்த மருத்துவமனையில், சம்மந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.