ADDED : ஜூன் 27, 2025 12:21 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே, எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்கை வேளாண்மை கள ஆய்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழ் பாடப்பிரிவில் உள்ள இயற்கை வேளாண்மை குறித்த பாடம் வகுப்பில் நடத்தப்பட்டது. மேலும், மாணவர்களை விவசாய நிலத்திற்கு அழைத்து சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழாசிரியர் இளையராஜா தலைமை தாங்கினார். வேதியியல் ஆசிரியர் லோகநாராயணன் முன்னிலை வகித்து, வேதிப்பொருட்களை விவசாயத்தில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விளக்கினார்.
தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகள் ரமேஷ், ராஜா ஆகியோர் மாணவர்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி என்பது குறித்தும், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறினர். இந்த கள ஆய்வில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.