/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மார்ச் 1க்குள்அரசு பள்ளியில் ஆக்கிரமிப்பு அலுவலகங்கள் அகற்றப்படும்...;மார்ச் 1க்குள்அரசு பள்ளியில் ஆக்கிரமிப்பு அலுவலகங்கள் அகற்றப்படும்...;
மார்ச் 1க்குள்அரசு பள்ளியில் ஆக்கிரமிப்பு அலுவலகங்கள் அகற்றப்படும்...;
மார்ச் 1க்குள்அரசு பள்ளியில் ஆக்கிரமிப்பு அலுவலகங்கள் அகற்றப்படும்...;
மார்ச் 1க்குள்அரசு பள்ளியில் ஆக்கிரமிப்பு அலுவலகங்கள் அகற்றப்படும்...;
ADDED : பிப் 06, 2024 05:52 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆக்கிரமித்துள்ள பிற துறை அலுவலகங்கள்வரும் மார்ச் 1ம் தேதிக்குள் அகற்றப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் உறுதியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகளின்றி 10க்கும் மேற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கரும்பலகை வசதிகூட இல்லாமல் மழை, வெயில் பாதிப்புகளுடன் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில், சில ஆண்டுகளுக்கு முன், நபார்டு வங்கி நிதியுதவியில் புதிதாக 20க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டன.
ஆனால், பள்ளிக்காக கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம், தோட்டக்கலை, பதிவுத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஆதார் பதிவு மையம் போன்ற பிற அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
அத்துடன் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில், மாவட்டம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள் வைக்கும் குடோனாக பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டடங்கள் அனைத்தும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இல்லாமல், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் தேவைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதனால், போதிய வகுப்பறைகள், கழிவறை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட தலைநகரின் முக்கியமான இந்த பள்ளியில் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் சுகாதாரம் பாதிப்படைந்து வருகிறது.
இதனைச் சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பாக இந்த பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் தலைவர் அருண் தலைமையில் 7க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கடந்த ஜனவரி 22ம் தேதி கலெக்டரிடம் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுக்கச் சென்றனர்.
ஆனால், அதனை வாங்க மறுத்த கலெக்டர் ஷ்ரவன்குமார், அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ள பிற துறை அலுவலகங்கள் விரைவில் அகற்றப்பட்டு பள்ளிக்கு வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதனால், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை வழங்காமல் திரும்பினர்.
ஆனால் கலெக்டர் அறிவித்த தேதி முடிந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைச் சுட்டிக்காட்டி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அருண் தலைமையில், உறுப்பினர்கள் ஹாருன்ரஷீத், தனலட்சுமி, சரஸ்வரி உள்ளிட்டோர் கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்கு பதில் அளித்த கலெக்டர் ஷ்ரவன்குமார், வரும் மார்ச் 1ம் தேதிக்குள், எதிர்வரும் முழு ஆண்டு தேர்வுக்கு முன்பாகவே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக்கிரமித்துள்ள பிற துறை அலுவலகங்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும் என உறுதியளித்தார்.