/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஏழை மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமிடும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஏழை மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமிடும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி
ஏழை மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமிடும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி
ஏழை மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமிடும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி
ஏழை மாணவர்களின் வெற்றிக்கு அடித்தளமிடும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி
ADDED : செப் 14, 2025 01:56 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி 1979ம் ஆண்டு, 230 மாணவர்களுடன் குடிசையில் துவங்கப்பட்டது. மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள ஆலை ஊழியர்களின் பொழுதுபோக்கு கட்டடத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொருவலுாரில் ஒரு ஓலை குடிசையில் வகுப்புகள் நடந்தன. இதில் தலைமை ஆசிரியருக்கான அலுவலகம் மற்றும் ஒரு வகுப்பு கட்டடம் மட்டும் செயல்பட்டு வந்தன. கடந்த 1994 முதல் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு ஒரே இடத்தில் வகுப்புகள் நடந்தன.
குறைவான மாணவர்களை கொண்டு உருவான இப்பள்ளிக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் அளித்து மாணவர்களை சேர்த்தனர். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்தன. இப்பள்ளியில் பயின்ற 95 சதவீத மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மூங்கில்துறைப்பட்டை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் எந்த ஒரு உயர்நிலைப்பள்ளியும் இல்லாததால் அனைத்து மாணவர்களும் மூங்கில்துறைப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்தாலும், 10ம் வகுப்புக்கு பிறகு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயில, அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரத்திற்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலம், சங்கராபுரத்திற்கு சென்று படிக்கும் நிலை ஏற்பட்டது.
இதில், தேவபாண்டலம் செல்ல வேண்டுமென்றால் 21 கி.மீ., துாரமும், திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரத்திற்கு 11 கி.மீ., செல்ல வேண்டி இருந்தது. இதனால் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2001ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது.
இப்பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் 1200க்கு, 1047 மதிப்பெண்களும், 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு, 479 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர், பொறியாளர், மருத்துவர், நீதித்துறை, வெளிநாடு, வருவாய்த் துறை, போலீஸ், வனத்துறை, பத்திரிக்கை, சினிமா, அரசியல், வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் சாதித்துள்ளனர்.
இப்பள்ளியில் படிக்கும் மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மாணவர்கள், விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருவதால், மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் இரு பால் ஆசிரியர்களின் அயராத உழைப்பால் பல மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கிராமபுற அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் நல் ஒழுக்கங்களை கற்று இன்று கடல் தாண்டி சாதித்தும் காட்டியதற்கு, மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியே காரணம். ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும் இப்பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்து வருகின்றது. இப்பகுதி சுற்றுவட்டார பகுதி ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாக மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி விளங்கி வருகிறது.