Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி புறநகரில் புதிய ஸ்டாண்ட்... வேண்டும்; போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா

கள்ளக்குறிச்சி புறநகரில் புதிய ஸ்டாண்ட்... வேண்டும்; போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா

கள்ளக்குறிச்சி புறநகரில் புதிய ஸ்டாண்ட்... வேண்டும்; போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா

கள்ளக்குறிச்சி புறநகரில் புதிய ஸ்டாண்ட்... வேண்டும்; போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா

ADDED : ஜூலை 11, 2024 04:17 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரத்தின் மையத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணமுடியாமல் மக்கள் அவதியடைந்து வருவதால் புறநகரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு அருகே பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. சேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் ஆகிய நகர நான்கு சாலைகளும் இணையும் இடத்தில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த 4 சாலைகளின் சந்திப்பு பகுதியிலேயே காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, வங்கிகள், தாலுகா அலுவலகம், கோர்ட், பதிவாளர் அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் தனியார் வணிக நிறுவனங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளது.

நகரின் மையப்பகுதியை பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமித்து இருப்பதால், அதனை சுற்றிலும் உள்ள சாலைகளில் வாகனங்களின் பெருக்கமும், பொதுமக்களின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. இதுவே மாவட்ட தலைநகராக உள்ள கள்ளக்குறிச்சி நகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள இந்த பஸ் ஸ்டாண்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விரிவுபடுத்தப்பட்டன. ஒன்றரை ஏக்கருக்கும் மேலான இடவசதியுடன் கூடிய வகையில் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தி சுற்று பகுதியில் கடைகள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் வழியும், வெளியேறும் வழியும் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் நகரப்பகுதியின் மொத்த போக்குவரத்தும் பாதிப்படைந்து வருகிறது.

அத்துடன் இவ்வழியாகவே அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. குறுகலாகிப்போய் கிடக்கும் இந்த வழிகளில்தான் தினசரி பஸ் ஸ்டாண்டு வந்து செல்லும் வாகனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கான வாகனங்களுடன் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும் கடந்து செல்கின்றன.

மேலும் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ் மற்றும் 100க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாலைகளின் ஒரு பகுதியை வரிசையாக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் என அடைத்துக்கொண்டிருப்பதால் இந்த சாலைகள் போதுமான அகலம் இன்றி மிகவும் குறுகலாக மாறி உள்ளது.

மாவட்டத்தின் தலைநகராகியும், பெருகி வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்றவகையில் இங்கு உள்ள சாலை வசதிகள் விரிவுபடுத்தப்படாததால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. அத்துடன் நகரின் மையத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து சீரமைப்புக்காக பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிக்னல் விளக்குகளும் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

எனவே பெருகி வரும் வாகனம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் தற்போது இயங்கி வரும் பஸ் ஸ்டாண்டை டவுன் பஸ் ஸ்டாண்டாக மாற்றி, வெளியூர் பஸ்களுக்கென நகரின் வெளிப்பகுதியில் புறநகர் பஸ் ஸ்டாண்டை ஏற்படுத்தவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us