/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வைர விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி வைர விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி
வைர விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி
வைர விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி
வைர விழா கொண்டாடிய கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி
ADDED : ஜூன் 07, 2025 10:09 PM

கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தரம் உயர்த்தப்பட்டு, தகைசால் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளை விட பல்வேறு விதங்களில் மேம்பட்ட வசதிகளை கொண்டதாக, பள்ளி மிளிர்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் அலுவலக பணிகளுக்காக கட்டப்பட்ட இந்த வளாகம் பின்பு இடைநிலை பள்ளியாக செயல்பட்டது. கடந்த, 1964ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து கடந்த, 1978ம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 2019-2020ம் ஆண்டில் இருந்து மாதிரி பள்ளியாக அரசால் தரம் உயர்த்தப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் திகழ்கிறது.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தொழிற்கல்வி பயிற்றுனர்கள் உள்ளிட்ட, 105 பேர் பணியாற்றுகின்றனர்.
முன்னாள் மாணவிகள், அரசு துறைகள் மட்டுமின்றி தனித்துவமாக பல்வேறு வகைகளில் சிறந்து விளங்குகின்றனர். கடந்தாண்டு, 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வைர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதற்கிடையே போதிய இடவசதியின்மையால் கடந்தாண்டு, ரூ.8 கோடி மதிப்பில் 30 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளி முழுவதும் 40 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
'அட்டல் டிங்கரிங் லேப்' எனும் உயர் தொழில்நுட்ப கூடத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு ட்ரோன், மினி ரோபா, செயற்கை நுண்ணறிவு துறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இங்கு பயிற்சி பெற்ற மாணவி கயல்விழி, திருச்சி, தென்னிந்திய அறிவியல் மாநாட்டில் பரிசு பெற்றார். அறிவியலுக்கு மேம்படுத்தப்பட்ட 8 ஆய்வுக்கூடங்கள் உள்ளன.
கற்றல் திறனை மேம்படுத்த 'ஸ்மார்ட் போர்டு' வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. தொழில் நுட்பத்திறனை வலுவாக்கும் வகையில் அதி நவீன கணினிக்கூடம் அமைக்கப்பட்டு, கணினி பாடங்கள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் நடக்கும் கலைத்திருவிழா மாநில போட்டிகளில், இப்பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்கின்றனர். அதில் வெற்றி பெற்ற சுவேதா எனும் மாணவி, சிங்கப்பூர், மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்பட்டார்.
தினமும் மாலையில் வாய்ப்பாட்டு, இசை, கருவியிசை, தையல், சிற்பம், ஓவியம், கோ-கோ, நடனம், கபடி, சிலம்பம், பென்சிங் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இப்பள்ளி மாணவி சுவேதா, தேசிய அளவிலான 'பென்சிங்' போட்டியில் பங்கேற்க பாட்னா சென்று வந்தார்.
மாணவி நட்சத்திரா, டேக்வான்டோ போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
இந்த பள்ளி, என்.சி.சி., எனும் தேசிய மாணவர் படை பயிற்சி அளிக்கப்படும் மாவட்டத்தின் முதல் பெண்கள் பள்ளியாக சிறப்பு பெற்றுள்ளது.
இதில் 100 மாணவிகள் பயிற்சி பெற்று பல்வேறு முகாம்களுக்கு சென்று துப்பாக்கி சுடுதல், மலையேறுதல் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்வில் ஒவ்வொரு ஆண்டும்
இப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று வருகின்றனர். கடந்தாண்டு தேர்வில் 6 பேர் வெற்றி பெற்றனர்.
கடந்த, 1936ம் ஆண்டு கட்டப்பட்ட நுாற்றாண்டை நெருங்கும் பழமையான, அழகான, ஆங்கிலேயர் கால கட்டடம் புதுப்பிக்கப்பட்டு கல்வியில் பெரும்பங்காற்றி வருகிறது. இங்கு பெரிய நுாலகம் கடந்த, 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறார், கல்வி, விளையாட்டு, மொழி, இலக்கண, இலக்கிய, அறிவியல், வரலாற்று பிரிவுகளை சேர்ந்த புத்தகங்கள் நுாலகத்தில் உள்ளன. மேலும், 20 வகை சிறார், அறிவியல், மாத, வார இதழ்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, 6 வகையான தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள் பயன்பாட்டிற்காக தினமும் வாங்கப்பட்டு வருகிறது.
பல்துறை வல்லுனர்களால் கருத்தரங்கம், ஆலோசனைக்கூட்டங்கள், வழிகாட்டுதல் பயிற்சி, தன்னம்பிக்கை ஊட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு பொதுத் தேர்வுகளிலும் மாணவிகள் சிறப்பிடம் பெற்று வருகின்றனர். 'நீட்', 'ஜே.இ.இ.இ.,' மற்றும் 'சி.எல்.ஏ.டி' போன்ற தேர்வுகளுக்கு சிறந்த வல்லுனர்களை கொண்டு பயற்சி அளிக்கப்படுகின்றன.
இதன் விளைவாக கடந்தாண்டு 3 மாணவிகள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.