Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு; வேட்டை கும்பல் அட்டூழியம் : ஒருவர் கைது

வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு; வேட்டை கும்பல் அட்டூழியம் : ஒருவர் கைது

வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு; வேட்டை கும்பல் அட்டூழியம் : ஒருவர் கைது

வனக்காப்பாளர் மீது துப்பாக்கி சூடு; வேட்டை கும்பல் அட்டூழியம் : ஒருவர் கைது

ADDED : மார் 22, 2025 09:20 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க முயன்ற வனக்காப்பாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் வேல்முருகன்,29 கிருஷ்ணாபுரம் பிரிவு வனக்காப்பாளரான இவர், நேற்று முன்தினம் இரவு கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி ஆட்டுப்பண்ணை காப்புக்காட்டில் ரோந்து சென்றார். வேட்டை தடுப்பு காவலர் சொக்கலிங்கம் உடன் சென்றார்.

இரவு 11.50 மணியளவில், வனவிலங்குகளை வேட்டையாட பைக்கில், துப்பாக்கியுடன் வந்த இருவரை, வேல்முருகன் மற்றும் சொக்கலிங்கம் பிடிக்க முயன்றனர்.

பைக்கில் வந்த நபர்களில் ஒருவர், தான் வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கியால், வனத்துறை ஊழியர்களை நோக்கி சுட்டார். அதில், வனக்காப்பாளர் வேல்முருகனின் வலதுகால் பாதத்தில் குண்டு பாய்ந்தது.

இருப்பினும், வேட்டைக்கு வந்த இருவரையும் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். துப்பாக்கி சூடு நடத்தியவர் தப்பிச் சென்றார். பிடிபட்டவரை விசாரித்ததில், சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் செல்லக்கண்ணு,43; துப்பாக்கியால் சுட்டவர் பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து செல்லக்கண்ணுவை கீழ்குப்பம் போலீசில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பாலசுப்ரமணியனை தேடி வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வனக்காப்பாளர் வேல்முருகன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விலங்குகளை வேட்டையாட வந்த செல்லக்கண்ணு, பாலசுப்ரமணியன் மீது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உளுந்துார்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us