Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஏரிகளில் மீன் வளர்ப்போர் ரசாயன உணவுகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு

ஏரிகளில் மீன் வளர்ப்போர் ரசாயன உணவுகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு

ஏரிகளில் மீன் வளர்ப்போர் ரசாயன உணவுகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு

ஏரிகளில் மீன் வளர்ப்போர் ரசாயன உணவுகளை கொட்டுவதாக குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 21, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஏரிகளில் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள் ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை, தண்ணீரில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு, ஆர்.டி.ஓ., லுார்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் 100 நாள் வேலை திட்டம் மூலம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

மீன்வளர்ப்பு துறையில் உள்ள திட்டங்களை தெரியப்படுத்துதல்; தாலுகா வாரியாக நிலம் அளவை செய்யும் இயந்திரம் வழங்குதல்; அனைத்து வருவாய் கோட்டங்களிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துதல்; உள்ளிட்டவைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா, பொட்டாஷ் தட்டுப்பாடு உள்ளது. மக்காச்சோள பயிர்களை சாலையில் காயவைப்பதால் விபத்து ஏற்படுகிறது. அதனால் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் தானிய உலர்களம் அமைக்க வேண்டும்.

கால்நடை மருத்துவமனை தேவை


நெற் பயிர் போன்று, மக்காச்சோளத்தை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், வேளாண் பொறியியல் துறை சார்பில் மூலக்காடு பகுதியில் வேளாண் இயந்திர வாடகை மையமும், கால்நடை மருத்துவமனையும் அமைக்க வேண்டும்.

தேவபாண்டலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைகள் எடை போட 15 நாட்கள் வரை காலதாமதமாகுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

கோமுகி அணையில் உள்ள வாய்க்கால்களை துார்வாருதல் மற்றும் விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த நபர்களுக்கு 'டிரோன்' பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரிகளில் ஆய்வு

அதேபோல, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, வலுவிழந்த கரைகளை பலப்படுத்த வேண்டும்.

கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் ஆகஸ்ட் மாதம் அரவை பருவம் தொடங்க வேண்டும். ஏரிகளில் மீன் வளர்ப்பவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தண்ணீரை திறந்து விடுகின்றனர்.

மீன் வளருவதற்காக ரசாயனம் கலந்த உணவுகளை தண்ணீரில் கொட்டுவதால் நாளடைவில் துர்நாற்றம் வீசுகிறது.

கால்நடைகளால் தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான ஏரிகள் குப்பை கொட்டும் இடமாக உள்ளது.

மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் நெல், வாழை, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, வீணாகின. அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு முறையாக பதில் கிடைப்பதில்லை. பாசார் ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் பாழடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும், நீர்நிலைகளில் வளர்ந்துள்ள முள் மரங்களை வெட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதையடுத்து விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் மற்றும புகார்கள் குறித்து பரிசீலனை செய்து

உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us