/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/திருக்கோவிலுாரில் கபிலர் கோட்டம் எதிர்பார்ப்பு! அருங்காட்சியத்திற்கு கட்டடம் தேவைதிருக்கோவிலுாரில் கபிலர் கோட்டம் எதிர்பார்ப்பு! அருங்காட்சியத்திற்கு கட்டடம் தேவை
திருக்கோவிலுாரில் கபிலர் கோட்டம் எதிர்பார்ப்பு! அருங்காட்சியத்திற்கு கட்டடம் தேவை
திருக்கோவிலுாரில் கபிலர் கோட்டம் எதிர்பார்ப்பு! அருங்காட்சியத்திற்கு கட்டடம் தேவை
திருக்கோவிலுாரில் கபிலர் கோட்டம் எதிர்பார்ப்பு! அருங்காட்சியத்திற்கு கட்டடம் தேவை
ADDED : ஜூன் 20, 2024 09:24 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் வாடகை கட்டடத்தில் இயங்கும் தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்டவும், கபிலருக்கு கோட்டம் அமைக்கவும் அரசு முன் வர வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் வரலாற்று சிறப்புமிக்க நகரம். பாரியின் உற்ற நண்பனான கபிலர், பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவிலுார் அழைத்து வந்து மலையமான் நாட்டு மன்னர்களுக்கு மணமுடித்து வைத்தார்.
கபிலர் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்கள் அதிகம் பாடியவர். தன் கடமை முடிந்த விரக்தியில் தென்பெண்ணையாற்றின் நடுவில் இருக்கும் குன்றில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு.
உயிர் நீத்த குன்றின் மீது உள்ள கோபுரம்தான் திருக்கோவிலுாரின் அடையாளமாக இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் கபிலருக்கு கோட்டம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள், ஆட்சியின் நிறைவு காலத்தில், கண்துடைப்பிற்காக கபிலருக்கு நினைவு துாண் ஒன்றை அவசரக்கதியில் அமைத்தனர். இன்றைய ஆட்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை திறந்து வைத்தனர். அத்துடன் தமிழ் அறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அரசு அமைதியாகிவிட்டது.
கபிலர் குன்றை புனரமைத்து சங்கப் புலவன் கபிலரின் பெருமையை பறைசாற்றும் வகையில், அரைகுறையாக நிற்கும் நினைவுத் துணை செம்மைப்படுத்தி, பூங்காவை ஏற்படுத்தி, நினைவு வளாகம் கட்டுவதுடன், தற்கால நடைமுறைக்கு ஏற்ப கபிலர் குன்றை மையமாக வைத்து செல்பி பார்க் அமைக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நகரின் பெருமையை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் வகையில் கடந்த 1994ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் கிடைத்த பொருட்களுடன் திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கல்வெட்டுக்களின் தகவல்கள் உள்ளடக்கிய காட்சியகம் ஒன்றை கீழையூரில் தொல்லியல் துறை உருவாக்கியது.
இது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும். திருக்கோவிலுாரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் மூடிக்கிடக்கும் தொல்லியல்துறை அருங்காட்சியகத்திற்கு சொந்த கட்டடம் கட்டவும், கபிலருக்கு கோட்டம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை அரசு நிறைவேற்றுமா? இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துவங்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.